/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டரை ரேஷன் கடை எதிரே கிராம மக்கள் தர்ணா போராட்டம்
/
தண்டரை ரேஷன் கடை எதிரே கிராம மக்கள் தர்ணா போராட்டம்
தண்டரை ரேஷன் கடை எதிரே கிராம மக்கள் தர்ணா போராட்டம்
தண்டரை ரேஷன் கடை எதிரே கிராம மக்கள் தர்ணா போராட்டம்
ADDED : அக் 31, 2025 11:07 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, தண்டரை ரேஷன் கடைக்கு விற்பனையாளரை நியமிக்காததால், கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி ஊராட்சியில், 750க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இங்குள்ள ரேஷன் கடைக்கு, நான்கு மாதங்களாக நிரந்தர விற்பனையாளர் இல்லை. இதனால், வேறொரு ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர், குறிப்பிட்ட நாட்களில் இந்த கடைக்கு வந்து, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்து வருகிறார்.
அப்போது கைரேகை பதிவதில் சிக்கல் ஏற்பட்டால், வேறொரு நாளில் அவர் வரும் வரை, பொருட்கள் வாங்க கார்டுதாரர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதன் காரணமாக, ரேஷன் பொருட்கள் உடனே கிடைக்காமல், கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து, வட்ட வழங்கல் அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் , எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் நேற்று, கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், ரேஷன் கடையை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற மதுராந்தகம் வட்ட வழங்கல் அதிகாரி உள்ளிட்டோர், கிராம மக்களுடன் பேச்சு நடத்தினர்.
பின், ரேஷன் கடைக்கு விற்பனையாளரை நியமிப்பதாக கூறியதும், தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.

