/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீணாகி வரும் மாமல்லை செம்மொழி பூங்கா சுற்றுலா பயணியர் அறியும் வகையில் நடவடிக்கை எடுப்பரா?
/
வீணாகி வரும் மாமல்லை செம்மொழி பூங்கா சுற்றுலா பயணியர் அறியும் வகையில் நடவடிக்கை எடுப்பரா?
வீணாகி வரும் மாமல்லை செம்மொழி பூங்கா சுற்றுலா பயணியர் அறியும் வகையில் நடவடிக்கை எடுப்பரா?
வீணாகி வரும் மாமல்லை செம்மொழி பூங்கா சுற்றுலா பயணியர் அறியும் வகையில் நடவடிக்கை எடுப்பரா?
ADDED : நவ 18, 2024 03:43 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடைவரைகள் ஆகியவை உள்ளன. அவற்றை உள்நாடு, சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, பண்டைய கால தமிழகத்தின் இலக்கிய, காப்பிய, காவிய, சரித்திர நிகழ்வுகளை உணர்த்தும் கற்சிலைகள் இடம்பெற்ற செம்மொழி சிற்ப பூங்காவும், இங்கு அமைந்துள்ளது.
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கடற்கரை விடுதி வளாகத்தில், இச்சிற்ப பூங்கா அமைந்துள்ளது. தமிழக சுற்றுலாத்துறை, இதை கடந்த 2009ல் அமைத்தது.
அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியில், பாறை கற்களில் செதுக்கி வடித்த, பழங்காலத்தை நினைவுபடுத்தும் அழகிய சிலைகள், இப்பூங்காவில் இடம்பெற்றுள்ளன.
பண்டைய கால பாரம்பரிய நிகழ்வுகளை, இங்குள்ள சிலைகள் வாயிலாக அறியலாம். சுற்றுலா வளர்ச்சி விடுதியில் தங்கும் பயணியர் மட்டுமே, இச்சிலைகளை காண அனுமதிக்கப்படுகின்றனர். பல்லவர் சிற்பங்களை காணும் பிற பயணியருக்கு அனுமதியில்லை.
பல்லவர் கால கலைச்சின்னங்கள், மாமல்லபுரத்தின் மைய பகுதியில் உள்ளன. சுற்றுலா பயணியர், அப்பகுதிக்கே செல்கின்றனர். பல்லவர் சிற்ப பகுதியிலிருந்து, 2 கி.மீ., வடக்கில், சுற்றுலாவிற்கு தொடர்பற்ற இடத்தில், செம்மொழி சிற்ப பூங்கா உள்ளது.
அதனால், அது குறித்து பயணியர் அறிய இயலவில்லை. அதுமட்டுமின்றி, அங்கு செல்வதற்கு பிரத்யேக வாகன ஏற்பாடும் இல்லை. சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில் தங்கும் பயணியரே, அதே வளாகத்தில் உள்ள சிற்ப பூங்காவை அறிய இயலாத நிலையே உள்ளது. அதனால், பண்டைய கால பாரம்பரியம் உணர்த்த அமைக்கப்பட்ட பூங்கா, பயணியர் பார்வையின்றி பயனின்றி வீணாகிறது.
சிற்ப பகுதியில் உள்ள அதே துறையின் மரகத பூங்காவில், செம்மொழி பூங்கா சிலைகளை மாற்றினால், பெரும்பாலான பயணியர் காணலாம்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தியும் வெளியிடப்பட்டது. தற்போது, மரகத பூங்கா தனியார் வாயிலாக ஒளிரும் தோட்டமாக மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் ஆகிய இடங்களில், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும திறந்தவெளி இடம் உள்ளது.
அப்பகுதி பராமரிப்பிற்காக, தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து, புல்வெளியுடன் பராமரிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு இடத்தில், செம்மொழி பூங்காவை ஏற்படுத்தி, பண்டைய கால நினைவுச் சிலைகளை அமைக்கலாம். பயணியர் கண்டு, பழங்கால நிகழ்வுகளை அறிவர்.
அதற்கு வாய்ப்பில்லை எனில், செம்மொழி பூங்கா உள்ளதை, பயணியர் அறியும் வகையில், சுற்றுலா விடுதி நுழைவிடம், சிற்ப பகுதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், செம்மொழி சிலைகள் படத்துடன், அறிவிப்பு பதாகை அமைக்கவேண்டும்.
அங்கு செல்ல விரும்பும் பயணியருக்கு, குறைந்த கட்டணத்தில் வாகன ஏற்பாடு அவசியம். அப்போது தான் செம்மொழி பூங்கா, பயணியருக்கு பயனுள்ளதாக அமையும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.