/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலம்பரைக்குப்பத்தில் தொடரும் உயிரிழப்பு சுற்றுலா பயணியர் குளிக்க நிரந்தர தடை வருமா?
/
ஆலம்பரைக்குப்பத்தில் தொடரும் உயிரிழப்பு சுற்றுலா பயணியர் குளிக்க நிரந்தர தடை வருமா?
ஆலம்பரைக்குப்பத்தில் தொடரும் உயிரிழப்பு சுற்றுலா பயணியர் குளிக்க நிரந்தர தடை வருமா?
ஆலம்பரைக்குப்பத்தில் தொடரும் உயிரிழப்பு சுற்றுலா பயணியர் குளிக்க நிரந்தர தடை வருமா?
ADDED : பிப் 06, 2025 01:13 AM

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலம்பரைக்குப்பத்தில், கழிவெளி நீர் கடலில் கலக்கும் முகத்துவாரம் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட 40 கிராமங்களில் இருந்து ஓங்கூர் ஆறு வழியாக வெளியேறும் மழைநீர், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட 45 கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் கழிவெளியில் இணைந்து, ஆலம்பரைக்குப்பத்தில் உள்ள முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.
கடலும் கழிவெளியும் இணையும் முகத்துவாரம் பகுதியில், நீர் சுழற்சி மற்றும் அதிக நீரோட்டம் இருப்பதால், இப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணியர், கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கின்றனர்.
அதே போல, அருகே உள்ள ஆலம்பரைக்கோட்டை பகுதியில் கழிவெளியில் உள்ள பள்ளத்தில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.
கடந்த 2022 அக்., மாதம், சூனாம்பேடு அருகே துறையூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சவிதா 13, கடலில் குளித்த போது, அலையில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கோமுட்டிசாவடி கடற்கரையில் இவரது சடலம் கரை ஒதுங்கியது.
கடந்த 2023 ஜனவரியில், புதுச்சேரி மாநிலம், சாரம் பகுதியைச் சேர்ந்த திவாகர், 22, கழிவெளிப் பகுதியில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அதே ஆண்டு பிப்ரவரியில், கடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மனோஜ்குமார், 17, கழிவெளிப் பகுதியில் குளித்த போது, நீரில் மூழ்கி இறந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம், சேம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹாசினி, 13, முகத்துவாரம் பகுதியில் குளித்த போது, அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, 5 நாட்களுக்கு பின், மயிலாடுதுறை மாவட்டம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு, ஆலம்பரைக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி சுற்றுலாப் பயணியர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
எனவே, முகத்துவாரம் மற்றும் கோட்டைப் பகுதியில் சுற்றுலாப் பயணியர் குளிக்க, நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
மீறி குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.