/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்குட்டையில் மண் கழிவு கலப்பு சாட்டையை சுழற்றுமா மாநகராட்சி
/
கல்குட்டையில் மண் கழிவு கலப்பு சாட்டையை சுழற்றுமா மாநகராட்சி
கல்குட்டையில் மண் கழிவு கலப்பு சாட்டையை சுழற்றுமா மாநகராட்சி
கல்குட்டையில் மண் கழிவு கலப்பு சாட்டையை சுழற்றுமா மாநகராட்சி
ADDED : டிச 09, 2024 03:17 AM
பம்மல்:தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம், பம்மலில், சர்வே எண்: 144/1ல் செங்கழுநீர் மலை உள்ளது. 300 அடி ஆழம் உடைய இக்கல்குட்டையில், எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும்.
பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில் கோடையில் குடிநீர் பிரச்னை ஏற்படும்போது, இந்த கல்குட்டை தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, வினியோகிக்கப்படுகிறது.
இதற்காக, கல்குட்டையின் மேற்பகுதியில், 6.40 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, நீர்மட்டம் குறைந்துள்ளதால் கல்குட்டையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுவதில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள், கல்குட்டையில் உள்ள தண்ணீரை கலப்பட மண்ணை சுத்தப்படுத்த, சட்டத்திற்கு புறம்பாக திருடி வருகின்றனர்.
பெரிய கட்டடங்கள் கட்டும் இடங்களில், நிலத்தில் தோண்டப்படும் மண்ணை லாரிகளில் இங்கு எடுத்து வருகின்றனர்.
கல்குட்டையை ஒட்டி நிறுத்தி, மோட்டார் வாயிலாக குவாரியில் தண்ணீரை இறைத்து, மண் மீது பீய்ச்சி அடிக்கின்றனர். இதில், மண் நிறம் மாறி விடுகிறது. அதேநேரத்தில், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்போது வெளியேறும் கழிவை, கல்குட்டையிலேயே கலக்கின்றனர்.
அந்த வகையில், தினமும் ஏகப்பட்ட லாரிகளில் கலப்பட மண்ணை எடுத்து வந்து, அலசி கல்குட்டையில் கலக்கின்றனர். இதனால், நீராதாரமான செங்கழுநீர் கல்குட்டையில் கலப்பட மண் கழிவு கலந்து, நிறம் மாறி வருகிறது.
இப்படியே போனால், குடிநீருக்காக தண்ணீரை சுத்திகரித்து மக்களுக்கு வினியோகிக்கும் போது, உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சமீபத்தில், பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து, 60க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளானது போல், பம்மலில் ஏற்படும் என்பதில் மாற்றமில்லை.
கல்குட்டையில் கழிவு கலப்பதாக புகார் அளிக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.
எனவே, மாநகராட்சி கமிஷனர் நேரிடையாக கல்குட்டையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பம்மல் - அனகாபுத்துார் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.