/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆணைக்குன்னம் பள்ளியின் மதில் சீரமைக்கப்படுமா?
/
ஆணைக்குன்னம் பள்ளியின் மதில் சீரமைக்கப்படுமா?
ADDED : அக் 19, 2025 09:24 PM

அச்சிறுபாக்கம்: ஆணைக்குன்னம் கிராமத்தில், துவக்கப் பள்ளியின் மதில் சேதமடைந்து உள்ளதால், சீரமைக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் அடுத்த ஆணைக்குன்னம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியில் கழிப்பறை அமைக்க, கடந்த சில மாதங்களுக்கு முன், கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் போது, வாகனம் மோதி பள்ளியின் நுழைவாயில் பகுதியில் மதில் சேதமடைந்தது. இதனால், பள்ளியின் நுழைவாயில் 'கேட்' ஒரு பக்கம் முழுமையாக சேதமடைந்தது.
இதன் காரணமாக இரும்பு 'கேட்'டை, அருகில் உள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்து உள்ளனர்.
மதில் உடைந்துள்ளதால், பள்ளி வளாகத்தில் ஆடு, மாடுகள், மற்றும் நாய்கள் உலா வருகின்றன.
கழிப்பறை கட்டுமான பணிகள் முடிந்தும், உடைக்கப்பட்ட மதிலை ஒப்பந்ததாரர் சீரமைக்கவில்லை.
எனவே, பள்ளி நுழைவாயில் பகுதியில் உடைந்துள்ள மதிலை அப்புறப்படுத்தி, புதிதாக கட்டித் தர வேண்டும் என, பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.