/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக் மீது அரசு பஸ் மோதி பரனுாரில் வாலிபர் பலி
/
பைக் மீது அரசு பஸ் மோதி பரனுாரில் வாலிபர் பலி
ADDED : ஜூலை 08, 2025 10:16 PM
செங்கல்பட்டு:சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 21.
அரசு வேலைக்காக, போட்டித் தேர்வுகளுக்கு படித்து வந்தார்.
இவர் நேற்று மதியம், தன் உறவினரான ராஜ்குமார், 29, என்பவருடன், மதுராந்தகத்தில் தான் படித்த பள்ளியில் தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் பெற விண்ணப்பிக்க, 'யமஹா ஆர்.15' பைக்கில் வந்தார்.
விண்ணப்பித்து விட்டு, மீண்டும் சென்னை நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில் சென்றனர். பைக்கை கார்த்திகேயன் ஓட்டினார்.
செங்கல்பட்டு பரனுார் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற போது, தென் மாவட்டத்தில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி வந்த அரசு பேருந்து, இவர்களது பைக்கில் மோதியது.
இதில் கார்த்திகேயன் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில், அதே பேருந்தின் பின்புற சக்கரம் தலையில் ஏறி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராஜ்குமார் காயமின்றி தப்பினார். விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து, நிற்காமல் சென்றுவிட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், கார்த்திகேயன் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.