/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆரில் 12 நடைமேம்பாலங்கள் அகற்றம் வாகன நெரிசலில் விழிபிதுங்கும் போலீசார்
/
ஓ.எம்.ஆரில் 12 நடைமேம்பாலங்கள் அகற்றம் வாகன நெரிசலில் விழிபிதுங்கும் போலீசார்
ஓ.எம்.ஆரில் 12 நடைமேம்பாலங்கள் அகற்றம் வாகன நெரிசலில் விழிபிதுங்கும் போலீசார்
ஓ.எம்.ஆரில் 12 நடைமேம்பாலங்கள் அகற்றம் வாகன நெரிசலில் விழிபிதுங்கும் போலீசார்
ADDED : ஜூன் 27, 2024 12:16 AM

சென்னை, மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரத்திற்கு, ஆறு வழி சாலை கொண்ட, 135 அடி அகல சாலை, 2008ம் ஆண்டு திறக்கப்பட்டது. வாகன எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
ஓ.எம்.ஆரில், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதில், சோழிங்கநல்லுார் வரை ஒரு நிறுவனமும், நேரு நகரில் இருந்து சிறுசேரி வரை மற்றொரு நிறுவனமும் பணி செய்கிறது. இந்த பணிக்காக, ஆறுவழிச் சாலையான ஓ.எம்.ஆர்., நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டது.
அனுமதி
மெட்ரோ ரயில் பாதையில், 90 அடி இடைவெளியில், ஒரு துாண்கள் வீதம் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு துாணும், 45 அடி உயரம் கொண்டது. துாண்கள் அமைத்து, 'பியர் கேப்' பொருத்தப்படுகிறது.
அந்த வகையில், மேட்டுக்குப்பம் முதல் காரப்பாக்கம் வரை, 1.50 கி.மீ., துாரத்தில், 'பியர் கேப்' பொருத்தப்பட்ட துாண்களில், 'யு-கிரேடர்' இணைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்கு, சாலையில் கூடுதல் இடம் தேவைப்படுகிறது. இதனால், ஆறு வழி சாலையில், நான்கு வழி பாதையை அடைத்து, பணிகளை மேற்கொள்ள முடிவானது.
இச்சாலை வழியாக பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், இரவு 10:00 முதல் காலை 5:00 மணி வரை, இதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
அதற்குள் பணியை முடித்து, தளவாடங்களை அகற்றி சாலையை, மீண்டும் நான்கு வழியாக மாற்றி கொடுக்க வேண்டும்.
ஆனால், பணி காலை 8:00 மணி வரை நடைபெறுகிறது. ஓ.எம்.ஆரை பொறுத்தவரை, காலை 6:00 மணி முதல் அதிக வாகனங்கள் செல்ல துவங்கும். பணியை 8:00 மணிக்கு முடிப்பதால், கடும் போக்-குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
முன்பை விட வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மெட்ரோ பணியால் வாகனங்களின் வேகம் கணிசமாக குறைந்துள்ளது.
அணுகு சாலையை முறையாக சீரமைத்து தராததால், நெரிசல் அதிகரிக்கிறது. துாண்களில், 'யு-கிரேடர்' அமைக்கும் பணியை, காலை 5:30க்குள் முடிக்க வலியுறுத்தி உள்ளோம். ஆனால், பணியை முடிக்க, 8:00 மணி வரை ஆகிறது. அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்குகின்றன.
நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள், போலீசாரை குறை கூறுகின்றனர். மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கூறினால் கண்டுகொள்வதில்லை.
அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் கொண்ட பகுதியானதால், போக்குவரத்து ஓரளவு சீராக இருக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். இதற்கு, மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
நடைபாலங்கள் அகற்றம்
மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை 15 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. சாலையின் குறுக்கே மறுதிசை செல்ல முடியாது. நடைமேம்பாலம் வழியாக தான் செல்ல முடியும்.
இதற்காக, மத்திய கைலாஷ், டைடல்பார்க், ஒய்.எம்.சி.ஏ., கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பி.டி.சி., காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், ஆவின், குமரன்நகர், செம்மஞ்சேரி, நாவலுார் ஆகிய, 14 இடங்களில், இரும்பு நடைமேம்பாலங்கள் உள்ளன.
ஒய்.எம்.சி.ஏ., சந்திப்பில் இருந்து சிறுசேரி வரை, சாலை மையத்தில் மேம்பாலம் கட்டமைப்பில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது.
துாண்கள் அமைத்தபின் அதில் 'பியர்கேப்' பொருத்தப்படும். அதுவரை நடைமேம்பாலங்கள் இருக்கும், பியர்கேப் பொருத்தி, 'யு-கிரேடர்' அமைக்க, நடைமேம்பாலங்கள் இடையூறாக இருப்பதால், அவை அகற்றப்படுகிறது.
தற்போது, யு-கிரேடர் அமைக்கும் இடங்களில், நடை மேம்பாலங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மாற்றாக, சாலையில் 4 அடி இடைவெளி விட்டு, பாதசாரிகள் கடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மத்திய கைலாஷ் சந்திப்பில் 'எல்' வடிவ மேம்பாலம் கட்டுவதால், அங்குள்ள நடைமேம்பாலம் நிரந்தரமாக அகற்றப்படுகிறது. மாறாக, மேம்பாலத்துடன் நடைமேம்பாலமும் கட்டப்பட உள்ளது. டைடல் பார்க் சந்திப்பில், மெட்ரோ ரயில் பாதை சுரங்கத்தில் செல்கிறது. எனவே,அந்த நடைமேம்பாலம் அகற்றப்படவில்லை.
மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
நடைமேம்பாலங்களை அகற்றிவிட்டு யு-கிரேடர் பொருத்துவோம். இதற்கு, 2 - 3 மாதங்கள் ஆகும். அதுவரை, சாலை வழியாக பாதசாரிகள் கடந்து செல்ல வழி அமைத்து, ஊழியர்கள் நியமித்து உள்ளோம்.
யு-கிரேடர் அமைத்தபின், அதே இடத்தில் மீண்டும் இரும்பு நடைமேம்பாலம் பொருத்தப்படும். அவை மெட்ரோ ரயில் பாதையின் கீழ் பகுதியில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.