/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டெங்கு'வின் தலைநகராக மாறி வரும் ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
/
'டெங்கு'வின் தலைநகராக மாறி வரும் ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
'டெங்கு'வின் தலைநகராக மாறி வரும் ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
'டெங்கு'வின் தலைநகராக மாறி வரும் ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
ADDED : ஆக 28, 2024 12:50 AM

ஆவடி, கொசு தொல்லையால், ஆவடி மாநகராட்சி 'டெங்கு'வின் தலைநகராக மாறி வருவதாக, மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.
ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம், நேற்று காலை மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நேற்றைய கூட்டத்தில் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
ரவி, 40வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: ஆவடியில் 40 வார்டுகளில் இருந்து வெளியேறும் மொத்த கழிவுநீரும், எங்கள் வார்டில் உள்ள மழைநீர் வடிகாலில் பாய்கிறது.
இதனால், மழை காலத்தில், வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, வடிகாலை ஆழமாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திவேல், 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: பொத்துார், ஆரிக்கம்பேடு, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள், திருமுல்லைவாயில், குளக்கரை சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், கனரக வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, குளக்கரை சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும்.
ஜான், 10வது வார்டு மா.கம்யூ., கவுன்சிலர்: ஆவடி, மாநகராட்சியாக தரம் உயர்ந்த பிறகும், நிர்வாக கட்டமைப்புகள் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால், வடிகால் துார்வார்தல், குப்பை அள்ளுவது, சாலை போடுவது உள்ளிட்ட எந்த பணிகளும் முறையாக நடக்கவில்லை.
கவுன்சிலராக நான் பதவியேற்று மூன்று ஆண்டுகளாகியும், எதற்கும் தீர்வு கிடைக்கவில்லை.
ஜோதிலட்சுமி, 22வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: மழைநீர் வடிகாலில் பல இடங்களில் இணைப்பு பணிகள், அரைகுறையாக உள்ளன. இதனால், மழை நீர் வீடுகளில் புகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சியில், பொது நிதியின் கீழ், அனைத்து வார்டுகளிலும் தெரு பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரகாஷ், 1வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: ஒவ்வொரு வார்டிலும், மாதத்திற்கு இரண்டு முறை கொசு மருந்து அடிக்கப்படுகிறது. இதனால் எந்த பயனும் இல்லை.
பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில், கொசு தொல்லையால் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆவடி மாநகராட்சி 'டெங்கு'வின் தலைநகரமாக மாறி வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா, 35வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: சாக்கடையில் துார் வாருதல், குப்பை அள்ளுவது உள்ளிட்ட பணிகளை ஒப்பந்த பணியாளர்கள் சரியாக வேலை செய்வதில்லை. அவர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தை எங்களுக்கு கொடுத்தால், நாங்களே வேலை செய்து கொள்கிறோம்.
கவுன்சிலர் கீதாவின் பேச்சை, கவுன்சிலர்கள் அனைவரும் வரவேற்று கை தட்டினர்.
பெரும்பாலான கவுன்சிலர்கள், நாய் தொல்லை, வடிகால் துார்வாருதல், குப்பை பிரச்னை, மாநகராட்சியில் புதிதாக தெரு பெயர் பலகை அமைக்க வேண்டும் உள்ளிட்டவற்றை பேசினர்.
ஆவடி கமிஷனராக கந்தசாமி பதவியேற்று 35 நாட்களாகின்றன. அவர் முறையாக கள ஆய்வில் ஈடுபட்டதால், கவுன்சிலர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு, கமிஷனரே பதில் அளித்தார்.
10 பேர் 'அட்மிட்'
ஆவடி மாநகராட்சியில், 10 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறை சார்பில் 'டெங்கு' பாதிக்கப்பட்ட இடங்களில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, 'டெங்கு' குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மீறி அலட்சியமாக இருந்து, கொசு புழுக்கள் உற்பத்தி செய்தால், அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்கு முன், வடிகால் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
- கந்தசாமி, மாநகராட்சி கமிஷனர்.