/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் முடிந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம்... மீண்டும்! :ரூ.254 கோடியில் 2,139 சாலைகளுக்கு விடிவு
/
தேர்தல் முடிந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம்... மீண்டும்! :ரூ.254 கோடியில் 2,139 சாலைகளுக்கு விடிவு
தேர்தல் முடிந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம்... மீண்டும்! :ரூ.254 கோடியில் 2,139 சாலைகளுக்கு விடிவு
தேர்தல் முடிந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம்... மீண்டும்! :ரூ.254 கோடியில் 2,139 சாலைகளுக்கு விடிவு
ADDED : ஏப் 28, 2024 01:21 AM

லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், பருவமழைக்கு முன்னதாக, பள்ளம் மேடான சாலைகளை கணக்கெடுத்து சீரமைக்கும் பணியை, சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, 254 கோடி ரூபாய் மதிப்பில், 2,139 சாலைகளுக்கு விடிவு ஏற்பட உள்ளது.
சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் 'மிக்ஜாம்' புயல் காரணமாக, பல்வேறு இடங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சாலைகள் கடுமையாக சேதமடைந்தன.
அத்துடன், மெட்ரோ ரயில் பணி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட சேவை துறை பணிகளாலும், பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து உள்ளன. இந்நிலையில், சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, 1,094.98 கி.மீ., நீளமுள்ள, 6,517 சாலைகளை சீரமைக்க, 708.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இச்சாலைகளை சீரமைப்பதற்கான 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடந்தன.
இதுவரை 5,047 எண்ணிக்கையிலான 815 கி.மீ., நீளமுடைய சாலைகள், 486 கோடி ரூபாய் செலவில் சீரமைத்து முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் துவங்கி நடைபெறும் போது, லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால், மேலும் சில டெண்டர்களை விட முடியாமல் போனது.
இந்நிலையில், தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. அதேநேரம், தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி தான் வெளியிடப்பட உள்ளன.
அதுவரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. ஜூன் மாதத்திற்குப் பின், தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலம் வரும் என்பதால், கோடைக்காலத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சென்னையில் சாலை சீரமைப்பு பணிகளை, மாநகராட்சி தீவிப்படுத்தி உள்ளது.
அதன்படி, தேசிய நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 156 கி.மீ., நீளமுள்ள 1,121 எண்ணிகையிலான சாலைகள், 114 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியில், 164 கி.மீ., நீளமுள்ள, 1,018 எண்ணிக்கையிலான சாலைகள், 140 கோடி ரூபாய் மதிப்பில் சீர் செய்யப்பட உள்ளன.
மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
சென்னையில் மழை மற்றும் பல்வேறு சேவைப் பணிகளால் சேதமடைந்த சாலைகளை கணக்கெடுத்து, சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளன.
அதன்படி, 320 கி.மீ., நீளமுள்ள 2,139 எண்ணிக்கையிலான உட்புற மற்றும் பேருந்து தட சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதற்கு, 254 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, 2023 - 24ம் நிதியாண்டில் எடுக்கப்பட்ட 6,517 எண்ணிக்கையிலான சாலைகளில், 70 சதவீத சாலை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
தற்போது, வரும் பருவமழையை கருத்தில் கொண்டு, அதற்கு முன்னதாகவே சாலையை சீரமைக்கும் பணியை துவங்க உள்ளோம். மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் மற்றும் பிற சேவை துறை பணிகள் நடைபெறாத இடங்களில் பழுதடைந்துள்ள சாலைகள் மட்டுமே, தற்போது சீரமைக்கப்பட உள்ளன.
அதன்படி, பருவமழைக்கு முன்னதாக, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, அனைத்து சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகளால் உட்புற சாலைகள், பேருந்து தட சாலைகளாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், உட்புற சாலைகளின் தரம், பேருந்து தட சாலை தரத்திற்கு உயர்த்தப்படும். அங்கு, பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

