UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 09:48 PM

சென்னை: சோமங்கலம் அருகே, தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை, ஆக., 25ம் தேதி, 'காஸ் கட்டர்' வாயிலாக உடைத்து, ஒன்பது லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தாம்பரம் கமிஷனர் அலுவலக தனிப்படை போலீசார் விசாரணையில், ஹரியானா, ராஜஸ்தான், உ.பி., மாநில எல்லைகள் சந்திக்கும் பகுதியில் செயல்படும், 'மேவாட்' கொள்ளையர்களின் கைவரிசை என்பது தெரிந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார், 28, என்ற கொள்ளையனை கைது செய்து விசாரித்தனர். இதில் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டத்தை ஒப்புக்கொண்டார்.
இவரது வாக்குமூலத்தின்படி, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது முஸ்தபா, 32, என்பவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.
