ADDED : ஜூலை 11, 2026 09:14 PM
அரசு வேலை தருவதாக மோசடி; ஒருவர் கைது
சென்னை: அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சரவணன், 28, உட்பட ஏழு பேரிடம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பல லட்சம் ரூபாயை சிலர் பறித்துள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு போலீசார் விசாரித்து, புனித தோமையர் மலை பகுதியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், 36, என்பவரை, நேற்று கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ஒரு பெண்ணை தேடி வருகின்றனர்.
**
ஸ்கூட்டர் விபத்து: காயத்துடன் தப்பிய சிறுமி
அம்பத்துார்: அம்பத்துாரைச் சேர்ந்த 30 வயது பெண், தன் 3 வயது மகளுடன், நேற்று முன்தினம் மாலை ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
சி.டி.எச்., சாலை, ராமசாமி பள்ளி சந்திப்பில், சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வேறொரு ஸ்கூட்டரில் வந்த வாலிபர், இளம்பெண் ஓட்டிய ஸ்கூட்டர் மீது மோதினார்.
இதில், மூவரும் துாக்கி வீசப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக தாய், மகள் லேசான காயத்துடன் தப்பினார். வாலிபருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.
**
டெலிவரி ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கத்தில் உணவு டெலிவரி ஊழியர் சாலமோன், 22, என்பவரிடம், பணப்பரிமாற்ற செயலியான ‘ஜிபே’ வாயிலாக, 3,000 ரூபாய் பறித்த, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த திருச்செல்வன், 19, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், தனியார் கல்லுாரி இரண்டாண்டு மாணவர்.
**
மொபைல் திருடிய 2 சிறுவர்கள் கைது
திருமங்கலம்: கோயம்பேடு சந்தையில் கூலி வேலை பார்க்கும் ராமசந்திரன், 54, என்பவர், தடம் எண் ‘77’ பேருந்தில் ஏறும்போது, அவரது மொபைல் போன் திருடுபோனது.
திருமங்கலம் போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவர்கள் இருவரை கைது செய்து, போன்களை பறிமுதல் செய்தனர். இருவரும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
**
தலைமறைவு குற்றவாளிகள் 2 பேர் கைது
வளசரவாக்கம்: வளசரவாக்கம் காவல் நிலைய எல்லையில், 2025, 2026ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட இரண்டு அடிதடி வழக்குகளில் தொடர்புடைய பாலாஜி, 35, மற்றும் கார்த்திக், 32, ஆகியோர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாகினர். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தால், இருவரையும், நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
**
மணல் கடத்திய லாரி பறிமுதல்
போலீசார் விசாரணை
அம்பத்துார்: கள்ளிக்குப்பம் பகுதியில், தனியார் நிறுவனத்தின் கட்டடப்பணி நடக்கும் இடத்தில் இருந்து சட்டவிரோதமாக சவுடு மணலை கடத்திய லாரியை, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
**
ஐஸ்கிரீம் கடையில் திருடிய ‘மாஜி’ ஊழியர் கைது
நொளம்பூர்: முகப்பேர் மேற்கு பகுதி ஐஸ்கிரீம் கடையில் 10,000 ரூபாயை திருடிய, முன்னாள் ஊழியரான அயப்பாக்கம் முகமது சபீரை, 22, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, திருட்டுக்கு பயன்படுத்திய பைக் மற்றும் கடையின் சாவியை பறிமுதல் செய்தனர்.
**
மரத்தில் துாக்கிட்டு பெண் தற்கொலை
மதுரவாயல்: மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் வசித்தவர் மல்லிகா, 54. இவரது கணவர் 10 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். மகனுக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளது.
கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீளாத மல்லிாக, வீட்டின் முன்புறத்தில் உள்ள வேப்பமரத்தில் துாக்கிட்டு தொங்கினார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, மல்லிகா இறந்தது தெரிந்தது.
