/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 அரசு நுாலகங்கள் இருந்தும் வீண் வாசகர்கள், பட்டதாரிகள் விரக்தி
/
3 அரசு நுாலகங்கள் இருந்தும் வீண் வாசகர்கள், பட்டதாரிகள் விரக்தி
3 அரசு நுாலகங்கள் இருந்தும் வீண் வாசகர்கள், பட்டதாரிகள் விரக்தி
3 அரசு நுாலகங்கள் இருந்தும் வீண் வாசகர்கள், பட்டதாரிகள் விரக்தி
ADDED : ஆக 26, 2024 01:58 AM

சென்னை, பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகம், 264 ஏக்கர் பரப்பு உடையது.
இங்கு, 28,000க்கும் மேற்பட்ட வீடுகள், எட்டு அரசு பள்ளிகள், 15 குழந்தைகள் மையங்கள், அரசு கல்லுாரி, ஐ.டி.ஐ., பணிமனை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இங்கு, 400 மீட்டர் இடைவெளியில், மூன்று இடங்களில் பகுதி நேர நுாலகங்கள் உள்ளன. 50,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. தினமும் 2 மணி நேரம் திறக்க வேண்டும். மூன்று நுாலகங்களும் முறையாக திறப்பதில்லை.
ஆனால், தினமும் திறப்பதாக பதிவேடுகளில் பதிவு செய்வதாக வாசகர்கள் கூறினர். நுாலகத்திற்காக ஒதுக்கிய ஊதியத்தையும் முறைகேடு செய்வதாக கூறப்படுகிறது.
வாசகர்கள், பட்டதாரிகள் கூறியதாவது:
இங்குள்ள 95 சதவீத குடும்பங்களில், முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர். போட்டி தேர்வுகளில் பங்கேற்று, அரசு வேலைகளில் சேர முயற்சி செய்கின்றனர்.
இதற்கு, நுாலகங்கள் பங்கு முக்கியம். குறுகலான வீட்டில் படிக்க சூழல் இல்லாததால், போட்டி தேர்வுக்கு நுாலகத்தில் அமர்ந்து படிக்க கேட்டோம். அனுமதி தரவில்லை. தினமும் திறப்பதில்லை.
நுாலக அதிகாரிகளிடம் கேட்டால், 'திறக்காவிட்டால் வேறு இடங்களில் உள்ள நுாலகங்களுக்கு செல்லுங்கள்' என அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நுாலகத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் கூறியதாவது:
பெரிய நுாலகங்கள் தான், அரசின் கவனம் பெறுகிறது. கிராமம், புறநகர் பகுதியில் முதல் தலைமுறை பட்டதாரிகள் பகுதி, கிளை நுாலகங்களை நாடுகின்றனர். சில அதிகாரிகளின் அலட்சியத்தால், இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. நிர்வாக குளறுபடியும் உள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள நுாலகங்களை, சென்னை மாவட்ட நுாலகத்துறையுடன் இணைத்தால், புறநகரில் உள்ள பகுதி, கிளை நுாலகங்கள் மேம்படும். அங்குள்ள மக்களும் பயன் அடைவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -