/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆண்டவர் கோவில் சாலை ஆக்கிரமிப்பு தீராத தலைவலியால் பக்தர்கள் ஆத்திரம்
/
ஆண்டவர் கோவில் சாலை ஆக்கிரமிப்பு தீராத தலைவலியால் பக்தர்கள் ஆத்திரம்
ஆண்டவர் கோவில் சாலை ஆக்கிரமிப்பு தீராத தலைவலியால் பக்தர்கள் ஆத்திரம்
ஆண்டவர் கோவில் சாலை ஆக்கிரமிப்பு தீராத தலைவலியால் பக்தர்கள் ஆத்திரம்
ADDED : மே 03, 2024 12:29 AM

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றது, நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவில்.
தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வர்.
ஆற்காடு சாலையில் இருந்து கோவில் முகப்பிற்குச் செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமுள்ள கடைகள், நடைபாதை மற்றும் சாலையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடையவே முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்னையை தீர்க்க யாரும் முன்வராததால், பக்தர்கள் ஆத்திரமடைகின்றனர்.
திருவிழா மற்றும் விசேஷ நாட்களில், இந்த சாலையே ஸ்தம்பித்து விடுகிறது. போக்குவரத்து போலீசார் எவ்வளவு முறை எச்சரித்தாலும், ஆளும் கட்சியினர், 'ஆசி' இருப்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லை.
மாநகராட்சியினரும் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. இதே நிலை நீடித்தால், பக்தர்கள் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, போக்குவரத்து போலீசார், வார்டு கவுன்சிலர் ஒருங்கிணைந்து, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு
சூளைமேடில் இருந்து வடபழனி வழியாக விருகம்பாக்கம் செல்பவர்களின் பிரதான வழித்தடமாக, நெற்குன்றம் பாதை எனப்படும் நெற்குன்றம் இணைப்பு சாலை விளங்குகிறது.
பக்தவச்சலம் காலனியைச் சேர்ந்தவர்கள் மும்பை நெடுஞ்சாலையை அடைந்து, கோயம்பேடு, அசோக்நகர் பகுதிக்கு செல்ல முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் பயணித்து வருகின்றன.
மேலும், வள்ளி திருமண மண்டபம், ஆண்டவர் கோவில் வாகன நிறுத்துமிடம், மூவர் ஜீவ சமாதி கோவில், தனியார் மருத்துவமனை ஆகியவை இங்கு உள்ளன. பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் இச்சாலையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.
நெற்குன்றம் பாதை சாலை, 40 அடி அகலம் கொண்டது. சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து, ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால், 'பீக் ஹவரில்' கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அச்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களையும் அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
- -நமது நிருபர் --