/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.என்.டி., சாலையில் பதறும் பாதசாரிகள் நடைபாதை மாயமானதால் அதிருப்தி
/
ஜி.என்.டி., சாலையில் பதறும் பாதசாரிகள் நடைபாதை மாயமானதால் அதிருப்தி
ஜி.என்.டி., சாலையில் பதறும் பாதசாரிகள் நடைபாதை மாயமானதால் அதிருப்தி
ஜி.என்.டி., சாலையில் பதறும் பாதசாரிகள் நடைபாதை மாயமானதால் அதிருப்தி
ADDED : மே 02, 2024 12:25 AM

செங்குன்றம், செங்குன்றம் ஜி.என்.டி., சாலையின் இருபுறமும், நாளுக்கு நாள் முளைக்கும் ஆக்கிரமிப்புகளால் நடைபாதைகள் மாயமாகி உள்ளன. இதனால், பாதசாரிகள் விபத்து அபாயத்தில் சாலையில் நடக்கும் அவலநிலை தொடர்கிறது.
சென்னை, செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, சென்னை - ஆந்திரா போக்குவரத்திற்கான நுழைவு வாயிலாக உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், தினமும் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், 700 சர்வீஸ் வரை இயக்கப்படுகின்றன.
தவிர, செங்குன்றம் நெல் மார்க்கெட்டிற்கு, ஆந்திராவில் இருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் நெல் எடுத்து வரப்படுகிறது.
செங்குன்றம் காவல் நிலையம் முதல் திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு வரை, 100 அடி அகலம் உடைய இந்த ஜி.என்.டி., சாலையின் இருபுறமும், 200க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், ஆட்டோக்களின் அடாவடியும் அதிகரித்து உள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறான அவற்றை போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், அப்பகுதியை கடப்பதற்கு பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சவாலாக உள்ளது. குறிப்பாக, செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே, 100 அடி சாலை, 40 அடியாக சுருங்கி குறுகிவிட்டது.
இதனால், அப்பகுதி விபத்து பகுதியாக மாறி வருகிறது. மேலும், அவசர சேவை வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தைச் சேர்ந்த செந்தில், 49, கூறியதாவது:
செங்குன்றம் பேருந்து நிலையத்தை கடந்து செல்வதில், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் தடுமாறுகின்றனர். அதேபோல, பேருந்துகளுக்கு குறுக்கே தாறுமாறாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. அவற்றை போலீசார் தடுக்க வேண்டும். நடைபாதை கடை வைத்திருப்போர், 'இங்கே நிற்காதே' என பயணியரை விரட்டும் அவலமும் இங்கே தான் நடக்கிறது. இதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜெயகுமார் கூறுகையில், இது குறித்து, நாரவாரிக்குப்பம் செயல் அலுவலரிடம் விசாரிக்கிறேன். மேலும், லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. அடுத்த மாதம், விதிகள் தளர்த்தப்பட்ட பின்தான், எதையும் செயல்படுத்த முடியும்,'' என்றார்.
நாங்கள், எங்களால் இயன்றவரை போக்குவரத்தை சீரமைக்கும் பணியை மேற்கொள்கிறோம். சாலை ஆக்கிரமிப் பிற்கு காரணம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் தான். அவர்களது ஒத்துழைப்பின்றி, ஆக்கிரமிப்புகள் உருவாகாது. ஆக்கிரமிப்புகளை துவக்கத்திலே தடுக்க வேண்டியது அவர்கள் தான்.
- போக்குவரத்து போலீசார்.

