/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடில் எஸ்கலேட்டர் நடைமேம்பாலம்: 2 இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
/
கோயம்பேடில் எஸ்கலேட்டர் நடைமேம்பாலம்: 2 இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
கோயம்பேடில் எஸ்கலேட்டர் நடைமேம்பாலம்: 2 இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
கோயம்பேடில் எஸ்கலேட்டர் நடைமேம்பாலம்: 2 இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
ADDED : ஆக 28, 2024 12:56 AM
சென்னை, கோயம்பேடு நுாறடிச்சாலையில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் கட்டும் இடத்தை தேர்வு செய்வதற்காக, நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.
கிண்டி கத்திப்பாரா - மாதவரம் ரவுன்டானா இடையிலான நுாறடிச்சாலையை மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இச்சாலையில், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வர்த்தகவளாகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பெருகியுள்ளன. இச்சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், முக்கிய சந்திப்புகளை கடக்க முடியாமல், பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். விபத்துகளும் அதிகரித்து வருகிறது.
எனவே, தேவையுள்ள இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
குறிப்பாக, கோயம்பேடில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு தீர்வு காணும் வகையில், நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை, சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார். இப்பணிக்கு 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட தென்மாவட்ட பேருந்துகள், கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன. இருப்பினும், மாநகர பேருந்துகள் அங்கு இயக்கப்பட்டு வருகின்றன.
முதலில் இங்கு நடைமேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. கோயம்பேடு ரவுண்டானா சந்திப்பில், சாலையை அதிகளவில் பாதசாரிகள் கடந்து செல்கின்றனர்.
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சமாதிக்கும் அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். அங்கும் விபத்துக்கள் அதிகரித்து உள்ளது. எனவே, இங்கு நடை மேம்பாலம் கட்டுவது அவசியமாக உள்ளது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று இரண்டு இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
இரண்டு இடங்களில் எங்கு நடை மேம்பாலம் கட்டுவது என்பது விரைவில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.