/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சரியாக மூடப்படாத பள்ளம் கருணீகர் சாலையில் நெரிசல்
/
சரியாக மூடப்படாத பள்ளம் கருணீகர் சாலையில் நெரிசல்
ADDED : ஜூன் 27, 2024 12:23 AM

ஆதம்பாக்கம், ஆலந்துார் மண்டலம்,ஆதம்பாக்கத்தில் பிரதானசாலைகளில் ஒன்று கருணீகர் சாலை. இச்சாலையை, ஆலந்துாரில் இருந்து ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம், உள்ளகரம் செல்வோர் அதிகம் பயன்படுத்துவர்.
இதில், 30 அடி அகலம் உடைய இச்சாலையின் இருபுறமும், பல்வேறு வர்த்தக கடைகள் வரத்தால், பஜார் வீதியாக மாறியது; அதனுடன் சாலையும் ஆக்கிரமிக்கப்பட்டது.
தற்போது, எதிரெதிரே வாகனத்தில் வந்து செல்வதே சிரமமாக உள்ளது. அந்த அளவிற்கு சாலை சுருங்கிவிட்டது.
அச்சாலையில் உள்ள கடைகளுக்கு சரக்கு இறக்க வரும் வாகனங்கள், பொருட்கள் வாங்க வரும் வாகனங்கள் என, சாலையை ஆக்கிரமித்துக் கொள்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கருணீகர்சாலையில் பாதாள சாக்கடையின் பிரதான குழாய், கடந்த மாதம் பழுதடைந்தது.
குடிநீர் வாரியத்தினர் சரி செய்த நிலையில், தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் மண் மேடாகி, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இது, போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
போக்குவரத்து நிறைந்த இச்சாலையை குடிநீர் வாரியமும், மாநகராட்சியும் இணைந்து முழுமையாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.