/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதசாரிகள் சாலையை கடக்க சிக்னல்கள்
/
பாதசாரிகள் சாலையை கடக்க சிக்னல்கள்
ADDED : ஆக 30, 2024 12:22 AM

சென்னை, பாதசாரிகள் சாலையை கடக்க, அவர்களே இயக்கும் வகையில் சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக நான்கு இடங்களில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்கென, 284 சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரிமோட் வாயிலாக இயங்கும் வகையில் போக்குவரத்து சிக்னல்கள் மாற்றி அமைக்கப்பட்டன.
தற்போது, பாதசாரிகள் சாலைகளை கடப்பதற்காக, அவர்களே சிக்னலை இயக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது. இதற்கான நடவடிக்கையை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் எடுத்துள்ளார். இத்திட்டத்திற்காக, எல்.என்.டி., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது சோதனை அடிப்படையில் நான்கு சிக்னல்களில் இத்திட்டம் பொருத்தப்பட்டுள்ளது. பாதசாரிகள் சாலையை கடக்க, நடைபாதை ஓரம் சிக்னல் பட்டன் அமைக்கப்படும்.
அதை அழுத்தினால், குறிப்பிட்ட வினாடி இடைவெளியில், சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்துவதற்கான சிக்னல் விளக்கு எரியும். பாதசாரி சாலையை கடக்கும் வரை குறிப்பிட்ட நேரம் சிவப்பு சிக்னல் எரியும்.
ஈ.வெ.ரா., சாலையில் ஈகா திரையரங்கம், டைலர்ஸ் சாலை, பச்சையப்பன் கல்லுாரி, ஹாரிங்டன் சாலை சிக்னலில் இத்திட்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கோயம்பத்துாரில் பாதசாரிகள் சாலையை கடக்க இதேபோல பட்டன் சிஸ்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இங்கு நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிக்னல்களில் காத்திருக்கும் வாகனங்களின் நெரிசலை தீர்க்கும் வகையில் தானியங்கியாக சிக்னல் செயல்படும் வகையிலும் மாற்றப்பட உளளது.