/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிக நிறம் கலந்த சிக்கன் பினாயில் ஊற்றி அழிப்பு
/
அதிக நிறம் கலந்த சிக்கன் பினாயில் ஊற்றி அழிப்பு
ADDED : மே 02, 2024 12:25 AM
அண்ணா சதுக்கம், கர்நாடக மாநிலத்தில், 'ஸ்மோக் பிஸ்கட்' உட்கொண்ட சிறுவன், அதன் பின் வலியால் துடிதுடித்த சம்பவம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, திரவ ஹைட்ரஜன் வாயிலாக தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என, தமிழக உணவு பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டு உள்ளது.
மேலும்,'ஹைட்ரஜன் ஐஸ்' கலந்த உணவுகளை உணவு விடுதிகளில் விற்பனை செய்தால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னையில் திரவ ஹைட்ரஜன் உணவு விற்கப்படுகிறதா என, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
மெரினாவில் ஐஸ்கிரீம் கடை மற்றும் துரித உணவகங்கள் நிறைய உள்ளன. இந்த கடைகளில் அதிக அளவில் ரசாயனம் கலக்கப்படுகிறதா என, நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு சிக்கன் கடையில் ஆய்வு நடத்திய போது, கோழிக்கறி துண்டுகளில், அதிக அளவில் சிவப்பு நிறம் கலக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அதை 'பினாயில்' ஊற்றி அழித்தனர். தொடர்ந்து இதுபோன்று நடந்தால், கடைக்கு,'சீல்' வைக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

