ADDED : ஆக 13, 2024 12:37 AM

ராமாபுரம், வளசரவாக்கம் மண்டலம் 155வது வார்டு ராமாபுரத்தில், 1.4 கி.மீ., துாரம் பாரதி சாலை உள்ளது. இது, ராமாபுரம், போரூர் மற்றும் நெசப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை.
இச்சாலையில், தனியார் பொறியியல் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரி அமைந்துள்ளது.
அதேபோல, ஆற்காடு சாலை மற்றும் மவுன்ட் பூந்தமல்லி சாலையில் மெட்ரோ பணிகள் நடப்பதால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால், எப்போதும் நெரிசல் அதிகம் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், பாரதி சாலையில் ஏராளமான கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து, தங்கள் கடையை விரிவாக்கம் செய்துள்ளதாக புகார்கள் வந்தன.
குறிப்பாக, பிரமாண்ட பெயர் பலகை, ஷீட், நடைபாதையில் சாய் தளம் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர்.
தொடர் புகாரையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று பொக்லைன் உதவியுடன், 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அதேபோல், நெசப்பாக்கம் மற்றும் ராமாபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் காமராஜர் சாலையில் உள்ள 15க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

