/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லிப்ட், எஸ்கலேட்டர் பழுது ரயில் பயணியர் அவதி
/
லிப்ட், எஸ்கலேட்டர் பழுது ரயில் பயணியர் அவதி
ADDED : செப் 02, 2024 02:21 AM

சென்னை:சிந்தாதிரிப்பேட்டை மேம்பால ரயில் நிலையத்தில், மின்துாக்கி, நகரும் படிக்கட்டு பழுதடைந்து உள்ளதால் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
எழும்பூர் - - கடற்கரை இடையே, 279 கோடி ரூபாயில் 4.2 கி.மீ., துாரத்திற்கு 4வது பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், கடந்த ஆண்டு ஆக., முதல், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு மேம்பால ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
காலை மற்றும் மாலை நேரத்தில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே, மின்சார ரயில்கள் இயக்கும்போது, தினமும் 122 மின்சார ரயில் சேவை இருந்தது. தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான நேரங்களில், 20 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரயில் இயக்குவதால், பயணியர், கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
மற்றொருபுறம் சிந்தாதிரிப்பேட்டை மேம்பால ரயில் நிலையத்தில், போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக, மின்துாக்கிகள், நகரும் படிக்கட்டுகளின் சேவை முடங்கி உள்ளது.
இதனால், படிகளில் ஏறிச் செல்ல முடியாமல் பயணியர் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'கடற்கரை - எழும்பூர் 4வது புதிய பாதை பணி, இரு மாதங்களில் பணி முடிக்கப்படும்.
இதையடுத்து, கடற்கரை - வேளச்சேரி ரயில் வழக்கம்போல் இயக்கப்படும். சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் வசதிகள் மேம்படுத்தப்படும்' என்றனர்.