/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏசி' கன்டெய்னருக்கு மாறுது செம்மஞ்சேரி காவல் நிலையம்
/
'ஏசி' கன்டெய்னருக்கு மாறுது செம்மஞ்சேரி காவல் நிலையம்
'ஏசி' கன்டெய்னருக்கு மாறுது செம்மஞ்சேரி காவல் நிலையம்
'ஏசி' கன்டெய்னருக்கு மாறுது செம்மஞ்சேரி காவல் நிலையம்
ADDED : ஜூலை 08, 2024 01:03 AM
சோழிங்கநல்லுார்:ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து, குறிப்பிட்ட பகுதியை பிரித்து, 2009ல், செம்மஞ்சேரி காவல் நிலையம் துவங்கப்பட்டது. சோழிங்கநல்லுார் சிக்னல் அருகில், கிராம நிர்வாக அலுவலக பழைய கட்டடத்தில், காவல் நிலையம் செயல்படுகிறது.
இந்நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட முடிவானது. இதையடுத்து, 2018ல் ஓ.எம்.ஆர்., ஆவின் அருகில், 24,000 சதுர அடி இடத்தில், 78 லட்சம் ரூபாய் செலவில், புதிய காவல் நிலையம் கட்டப்பட்டது.
இக்கட்டடம் நீர்நிலையில் கட்டுவதாக, அறப்போர் இயக்கம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால், காவல் நிலையத்தை திறக்க முடியவில்லை.
இந்நிலையில், காவல் நிலையத்தை ஒட்டி, ரவுண்டானா மேம்பாலம், இரு வழித்தட மெட்ரோ ரயில் நிலையங்கள், 100 அடி உயரத்தில் அமைய உள்ளன.
மெட்ரோ பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதால், இங்குள்ள சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையம் இடிக்கப்பட உள்ளது.
தற்காலிகமாக செயல்பட மாற்று இடம் தேடியும் கிடைக்காததால், கன்டெய்னரில் காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. கன்டெய்னர் நிலையத்தை அமைக்கும் பொறுப்பை மெட்ரோ நிர்வாகம் ஏற்றுள்ளது.
சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு சேர்த்து, 40 அடி நீளம், 10 அடி அகலத்தில், குளிர்சாதன வசதி உடைய இரண்டு கன்டெய்னர் தயாராகிறது.
இது, தற்போதைய காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டி, மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்திய இடத்தில் அமைய உள்ளது.
போக்குவரத்து காவல் நிலையத்திற்கு, 20 அடி நீளம், 10 அடி அகலத்தில், ஒரு கன்டெய்னர் தயாராகிறது. இது, தற்போதைய போக்குவரத்து காவல் நிலையம் அருகே அமைக்கப்பட உள்ளது.
இம்மாத இறுதிக்குள், சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களை இடம் மாற்றும் வகையில், மெட்ரோ நிர்வாகம் பணி மேற்கொண்டு வருகிறது.