/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கருடசேவையில் உடைந்த சப்பரம் பெருமாள் சிலை சாய்ந்ததால் அதிர்ச்சி
/
கருடசேவையில் உடைந்த சப்பரம் பெருமாள் சிலை சாய்ந்ததால் அதிர்ச்சி
கருடசேவையில் உடைந்த சப்பரம் பெருமாள் சிலை சாய்ந்ததால் அதிர்ச்சி
கருடசேவையில் உடைந்த சப்பரம் பெருமாள் சிலை சாய்ந்ததால் அதிர்ச்சி
ADDED : மே 23, 2024 12:15 AM

திருவொற்றியூர், 'சின்ன காஞ்சிபுரம்' என பெயர் பெற்றது, திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில். 400 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலின், ராஜகோபுர திருப்பணிகள் காரணமாக, 2007ம் ஆண்டு முதல், எந்த திருவிழாக்களும் நடக்கவில்லை.
கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம் திருப்பணிகள் முடிந்து, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து உற்சவங்கள் நடக்கின்றன.
அந்த வரிசையில், வைகாசி பிரம்மோற்சவம் 20ம் தேதி அதிகாலை, கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது.
இந்த நிலையில், நேற்று நடக்கவிருந்த முக்கிய நிகழ்வான கருட சேவையில், கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, ராஜகோபுரத்தில் நின்று சூரிய பகவானை தரிசிக்கும் நிகழ்வு அதிகாலை நடைபெற இருந்தது.
அதன்படி, ஸ்ரீ தேவி - பூதேவி சமேத உற்சவர் பவளவண்ண பெருமாள், வெளிர் பச்சை பட்டு உடுத்தி, கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
பின், சுவாமி எழுந்தருளிய சப்பரம், கோவில் வளாகத்தில் இருந்து, ராஜகோபுரம் வரை கொண்டு வரும்போது, சப்பரத்தின் தண்டு உடைந்து, உற்சவர் சிலை பக்கவாட்டில் சாய்ந்தது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதில் பட்டாச்சாரியார்கள் உட்பட சிலருக்கு, லேசான காயம் ஏற்பட்டது. கோபுர தரிசனம் காண்பதற்காக, பக்தர்கள் அனைவரும் ராஜகோபுரம் வெளியே காத்திருந்ததால், நல்வாய்ப்பாக விபத்து ஏதும் ஏற்படவில்லை.
உடனடியாக சுவாமி சிலை துாக்கி நிலைநிறுத்தப்பட்டு, ராஜகோபுர கதவுகள் சாத்தப்பட்டன. பின், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மாற்று தண்டு வரவழைக்கப்பட்டு சப்பரத்தில் பொருத்தப்பட்டது. இதையடுத்து கருடசேவை நடந்தது.

