/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டலம், வார்டுகளில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு... சிறப்பு குழு பாலியல் குற்றங்களை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை
/
மண்டலம், வார்டுகளில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு... சிறப்பு குழு பாலியல் குற்றங்களை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை
மண்டலம், வார்டுகளில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு... சிறப்பு குழு பாலியல் குற்றங்களை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை
மண்டலம், வார்டுகளில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு... சிறப்பு குழு பாலியல் குற்றங்களை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை
ADDED : மார் 09, 2025 01:00 AM

பள்ளி, வீடு உள்ளிட்ட இடங்களில், தனியாக இருக்கும் குழந்தைகளிடம் நடந்துவரும் பாலியல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில், சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. அதற்காக, 15 மண்டலங்கள் மற்றும் 200 வார்டுகளில், தலா 24 பேர் உடைய குழந்தைகள் பாதுகாப்பு குழுவை அமைக்கிறது. பலதுறை அதிகாரிகள் ஒருங்கிணைவதால், குழந்தைகள் மீது நடத்தப்படும் குற்றங்கள் தடுக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு, சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகள், 'போதை' தந்தை, உறவினர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.
பள்ளி, டியூசன் சென்டர், காப்பகம் போன்ற இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
சென்னையில் தினமும், ஏதாவது ஒரு காவல் நிலையத்தில், 'போக்சோ' வழக்கு பதிவாகி வருகிறது. இதன் கீழ், மாணவர் முதல் முதியோர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் கைதாகி வருகின்றனர். சமரசத்தில் முடியும் சம்பவங்களும், ஆங்காங்கே மறைமுகமாக நடக்கின்றன.
தொண்டு நிறுவனங்கள், காவல் துறை, குழந்தைகள் நல மையம் போன்ற அமைப்புகள், பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு நடத்தியும், குழந்தைகள் மீது நடக்கும் குற்றங்கள் குறையவில்லை.
மேலும், பெற்றோர் மரணம் மற்றும் தாய், தந்தை யாராவது ஒருவர் கள்ளத்தொடர்பில் பிரிவதாலும், குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகின்றன.
இது போன்ற சம்பவங்களால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், குழந்தைகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், சென்னை மாநகராட்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மண்டலம் மற்றும் வார்டு வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான குழுவின் தலைவர், செயலர், உறுப்பினர்கள் தேர்வு பணி நடந்து வருகிறது. இக்குழுவின் செயல்பாடு குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
குழந்தைகள் நலன் சார்ந்து, மண்டலம், வார்டு வாரியான குழுக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இக்குழு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி, குழந்தைகள் நலன் சார்ந்து விவாதிக்கும்.
ஏற்கனவே நடந்த குற்றங்களால் குழந்தைகள், பெற்றோரின் மனநலத்தை மேம்படுத்துவது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவி, நிதி உதவி வழங்குவது, கல்வியை தொடர வைப்பது போன்ற செயலில் ஈடுபடும்.
தவிர, பாலியல் சார்ந்த குற்றங்கள் நடக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாதிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் இருந்து, குழந்தை நல அலுவலர்கள் உதவியுடன் குற்றவாளியை கைது செய்ய உதவுவது, விழிப்புணர்வை அதிகரிப்பது போன்ற செயல்களில் இக்குழு ஈடுபடும்.
இதன் வாயிலாக, போக்சோ வழக்குகளை குறைப்பதுடன், குற்றம் செய்ய முயற்சிப்போருக்கும் பயம் ஏற்படும். இந்த குழுவின் செயல்பாட்டால், குழந்தைகளின் மனநலம், உடல்நலம் மேம்படுவதோடு, அவர்களது கல்வியும் பாதிக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -