/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பற்ற லாரிகள் நிறுத்த வளாகம் ரூ.30.30 கோடி ஒதுக்கியும் பணி கொர்ர்ர்...
/
பராமரிப்பற்ற லாரிகள் நிறுத்த வளாகம் ரூ.30.30 கோடி ஒதுக்கியும் பணி கொர்ர்ர்...
பராமரிப்பற்ற லாரிகள் நிறுத்த வளாகம் ரூ.30.30 கோடி ஒதுக்கியும் பணி கொர்ர்ர்...
பராமரிப்பற்ற லாரிகள் நிறுத்த வளாகம் ரூ.30.30 கோடி ஒதுக்கியும் பணி கொர்ர்ர்...
ADDED : மே 31, 2024 12:34 AM

மாதவரம், சென்னை, மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே, 1992ம் ஆண்டு, தமிழக அரசால், 86 ஏக்கர் பரப்பளவில், சென்னை பெருநகர லாரிகள் நிறுத்த வளாகம் உருவாக்கப்பட்டது.
அதில், 250க்கும் மேற்பட்ட தனியார் சரக்கு லாரி 'புக்கிங்' அலுவலகங்கள் உள்ளன. மேலும், தேசிய சிறுதொழில் வளர்ச்சி கழகம், மத்திய சேமிப்பு கழகம், மருத்துவ சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பு வைக்கும் கிடங்குகள், தொலை தொடர்பகம், மின்வாரிய அலுவலகம் ஆகியவையும் உள்ளன.
ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்திற்காக, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, தினமும் 450 முதல், 600 லாரிகள் வரை, இங்கு வந்து செல்கின்றன.
இதன்வாயிலாக, 10,000 பேர் வரை, அங்கு வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.
ஆனால், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் தான், பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக உள்ளது. வளாகத்தின் 80 அடி அகல பிரதான சாலையும், அதை இணைக்கும், 10 சாலைகளும், மிக மோசமாக சேதமடைந்துள்ளன.
அதனால், லாரிகள் நிலைதடுமாறி, விபத்தில் சிக்கி பழுதடைகின்றன. அவற்றில் கொண்டு வரப்படும் பொருட்களும், சேதமடையும் நிலை ஏற்படுகிறது.
மேலும், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் துார்ந்து போய் விட்டன.
அதனால், கழிவுநீர் வடிய வழியின்றி சாலையில் தேங்கி, சாலைகள் புதைகுழியாக மாறி, போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன.
அங்கு நிலவும், சுகாதார சீர்கேடால், லாரி ஊழியர் மற்றும் புக்கிங் அலுவலக ஊழியர்கள் என பலரும், உடல் நல பாதிப்பு மற்றும் விபத்துகளில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
மேலும், பூமிக்கு அடியில் பதிக்கப்பட வேண்டிய உயர் அழுத்த மின் வடங்கள், சாலையெங்கும் ஆபத்தான வகையில் கிடக்கின்றன.
அவையும், மின் அழுத்தம் தாங்காமல், அடிக்கடி தீப்பிடித்து அவ்வப்போது மின் தடையும் தொடர்கிறது.
மேலும், மாநகராட்சி வாயிலாக இங்கு முறையான, 'பார்க்கிங்' வசதியும் மேற்கொள்ளப்படவில்லை. இங்கு, 1,200 சதுர அடி கொண்ட லாரி புக்கிங் அலுவலகம் மூலம், ஆண்டுக்கு 25,000 ரூபாய் வரை, சொத்து மற்றும் தொழில் வரிகள் செலுத்தப்படுகின்றன.
உரிய தொழில் வரி செலுத்தியும் அடிப்படை வசதிகள் என்பது, பல ஆண்டாக, 'கானல்' நீராக உள்ளது. சங்கத்தின் பல்வேறு முயற்சிக்குப் பின், சி.எம்.டி.ஏ., மூலம், அடிப்படை வசதி மேம்பாட்டிற்காக, கடந்தாண்டு 30.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், அதற்கான பணிகள் இன்று வரை துவங்கப்படவில்லை. இந்தாண்டு ஜனவரியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் நடந்த லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக, பணி துவங்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால், லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் அலுவலக உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அதற்கான பணி, கடந்தாண்டு மழையாலும், இந்தாண்டு லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதி காரணமாகவும், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம், விதிகள் தளர்த்தப்பட்டதும், பணிகள் விரைவாக துவங்கப்படும்'என்றனர்.
எரிபொருள் விலை உயர்வு, உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் அதிகரித்தாலும், மக்களின் நலன் கருதி செயல்படுகிறோம். ஆனால், இங்குள்ள லாரி நிறுத்தம் மிக மோசமான நிலையில் உள்ளது. அரசு நிதி ஒதுக்கியும், இதுவரை பணி துவங்கவில்லை. இங்குள்ள வளாகத்தை போல், 50 ஏக்கரில், மேம்படுத்தப்பட்ட, 20 வளாகம் தேவைப்படுகிறது. அப்போது தான் நெரிசல் பிரச்னை தவிர்க்கப்படும்.
வி.ஜி.ஜெயகுமார், தலைவர்,
சென்னை பெருநகர லாரி உரிமையாளர் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்கள் நலச்சங்கம், மாதவரம்.