/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதையில் சமூக நலக்கூடம் கட்டும் பணி தீவிரம்
/
சைதையில் சமூக நலக்கூடம் கட்டும் பணி தீவிரம்
ADDED : மே 02, 2024 12:36 AM

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டையில் நான்கு ஆண்டுகளுக்கு முன், எம்.எல்.ஏ., நிதியில் துவங்கப்பட்டு, நீதிமன்ற வழக்கால் தடைபட்ட சமூக நலக்கூடம் கட்டும் பணி, மீண்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை 142வது வார்டில், வி.வி.கோவில் தெரு உள்ளது.
இத்தெருவில், நெடுஞ்சாலை துறை அலுவலகம், ரேஷன் கடை, குடிநீர் வாரிய அலுவலகம், காந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. இப்பகுதியில் காலியாக இருந்த இடத்தில், சிலர் பழக்கடை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் அப்போது எம்.எல்.ஏ.,வாகவும், தற்போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராகவும் உள்ள சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., நிதியில், 1.35 கோடி ரூபாய் செலவில், சமூக நலக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டன.
அப்போது, அங்கு வியாபாரம் செய்த வியாபாரிகள் சிலர், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால், சமூக நலக்கூடம் கட்டும் பணி தடைபட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின், அது மாநகராட்சி இடம் என, தீர்ப்பு வந்துள்ளது.
இதையடுத்து, பாதியில் நிறுத்தப்பட்ட சமூக நலக்கூட பணிகளை, மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் துவக்கி உள்ளனர். மூலப்பொருட்கள் விலை உயர்வை அடுத்து, 1.35 கோடி ரூபாய் செலவில், நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட இருந்த சமூக நலக்கூடம், தற்போது, 2.40 கோடி ரூபாய் செலவில், கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
புதிய சமூக நலக்கூட கட்டடத்தில், கீழ் தளத்தில் வாகன நிறுத்தம், முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் ஹால் அமைய உள்ளன. இந்த சமூக நலக்கூட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

