/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அலங்கோலமான கேபிள்கள் சாலைகளில் அகற்றம் ஆபத்தான விளம்பர பேனர்களுக்கு தொடரும் சலுகை
/
அலங்கோலமான கேபிள்கள் சாலைகளில் அகற்றம் ஆபத்தான விளம்பர பேனர்களுக்கு தொடரும் சலுகை
அலங்கோலமான கேபிள்கள் சாலைகளில் அகற்றம் ஆபத்தான விளம்பர பேனர்களுக்கு தொடரும் சலுகை
அலங்கோலமான கேபிள்கள் சாலைகளில் அகற்றம் ஆபத்தான விளம்பர பேனர்களுக்கு தொடரும் சலுகை
ADDED : ஆக 06, 2024 01:00 AM

சென்னை, இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி, 1 கி.மீ, கேபிள்களுக்கு, 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநராட்சியில், இந்த விதிப்படி கேபிள் அமைக்கப்படவில்லை.
மேலும், 2023ம் ஆண்டில் இருந்து கேபிளுக்கான கட்டணத்தையும், அந்நிறுவனங்கள் முறையாக செலுத்தவில்லை.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி முழுதும் உள்ள சாலைகளை, தினசரி துாய்மைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, 11ம் தேதி வரை பேருந்து மற்றும் உட்புற சாலைகளில் தீவிர துாய்மை பணி மேற்கொள்ளவும், அத்துடன் சாலையோரங்களில் இருக்கும் குப்பை, கட்டட கழிவு, பழுதடைந்த வாகனங்களை அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, சாலைகளில் அலங்கோலமான நிலையில் உள்ள கேபிள்களை அகற்றும் பணியை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, சென்னையில் 50 கி.மீ., நீளத்தில் அமைக்கப்பட்டிருந்த விதிமீறிய மற்றும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய கேபிள்களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். அதில், சில கேபிள்கள், இணைப்பு இல்லாமல், பயன்பாடற்ற நிலையில் இருந்தன.
இதுபோன்ற கேபிள்கள் அகற்றும் பணிக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, விளம்பர பதாகைகள், பலகைகளை அகற்றுவதில் தயக்கம் காட்டி வருவது குறித்து அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
சென்னையின் பிரதான சிக்னல்களில் உள்ள கட்டடங்களில், எவ்வித பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றாமல் ராட்சத விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் மும்பையில் மழை பெய்தபோது, ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்து, 14 பேர் உயிரிழந்தனர். பலர், கை, கால் இழந்து தவித்து வருகின்றனர்.
தற்போது, சென்னையில் மழைக்காலம் வர உள்ளது. மழையின்போது, அதிவேக புழல் காற்று வீசும்போது, சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் சரிந்து விழுந்ததால், பெரிய அளவிலான உயிர் சேதத்தை ஏற்படுத்தும்.
தீவிர துாய்மை பணியை போல், அனுமதி பெறாத விளம்பர பேனர்களையும், அவற்றுக்கு வைக்கப்பட்டுள்ள இரும்பு சாரத்தையும் அகற்ற வேண்டும்.
விளம்பர பலகைகளால் பெரிய அளவில் வருவாய் இருக்காது என தெரிந்தும், அவர்களை சென்னை மாநகராட்சி தொடர்ந்து அனுமதிப்பதும், சலுகை காட்டுவதும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை தான் ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரிப்பன் மாளிகை எதிரே
முறிந்து தொங்கிய பேனர்
சென்னையின் அழகை கெடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் ஏராளமான விளம்பர பேனர்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இவற்றால், விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கின்றன.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் பிறப்பித்த கண்டிப்பான உத்தரவு காரணமாக, அனுமதி பெறாத விளம்பர பேனர்களை சென்னை மாநகராட்சியினர் அகற்றினர். ஆனால், பேனர் அமைப்பதற்கான பிரமாண்டமாக இரும்பில் அமைக்கப்பட்ட இரும்பு சட்டங்களை அப்புறப்படுத்தவில்லை.
இந்நிலையில், ரிப்பன் மாளிகை எதிரே வைக்கப்பட்டிருந்த பேனர் இரும்பு சாரம், நேற்று காலை முறிந்து சாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
சம்பவம் அறிந்து வந்த 'வீரா' மீட்பு வாகன படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், வெல்டிங் செய்து, பேனர் சாரத்தை முற்றிலுமாக அகற்றினர்.
இதுகுறித்து பாதசாரிகள் கூறியதாவது :
சென்னையில் பல இடங்களில் பேனர் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட இரும்பு சாரங்கள் மிகவும் துருப்பிடித்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன. மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், விளம்பர பேனர்களால் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் இருந்த கேபிள் அகற்றும் பணியை தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் 1.50 கோடி வசூல் ஆகியுள்ளது. அதேபோல், விதிக்கு உட்பட்டு விளம்பர பதாகை அமைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.