/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வார்டுதோறும் பூதாகரமாகி வரும் பிரச்னைகள் விழித்துக்கொள்வரா மாநகராட்சி அதிகாரிகள்? மக்கள் அதிருப்தி
/
வார்டுதோறும் பூதாகரமாகி வரும் பிரச்னைகள் விழித்துக்கொள்வரா மாநகராட்சி அதிகாரிகள்? மக்கள் அதிருப்தி
வார்டுதோறும் பூதாகரமாகி வரும் பிரச்னைகள் விழித்துக்கொள்வரா மாநகராட்சி அதிகாரிகள்? மக்கள் அதிருப்தி
வார்டுதோறும் பூதாகரமாகி வரும் பிரச்னைகள் விழித்துக்கொள்வரா மாநகராட்சி அதிகாரிகள்? மக்கள் அதிருப்தி
ADDED : மே 07, 2024 11:55 PM
சென்னை சென்னையில், வார்டுதோறும் அதிகாரிகள் களமிறங்கி பணி புரிந்தாலே, பெரும்பாலான பிரச்னைகளுக்கு விடிவு கிடைக்கும். ஆனால், பிரச்னைகள் பூதாகரமாகும் போது தான் பெரும்பாலான அதிகாரிகள் விழித்துக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.
கோடை வெயில் தாக்கம் அதிகரித்திருப்பதுபோல், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதிக்கும், பிரச்னைகளும் அதிகரித்துள்ளன.
தீ விபத்து
மாநகராட்சி முழுதும் அடிக்கடி மின் தடை, குடிநீர் வினியோகம் பாதிப்பு, கால்நடைகளால் விபத்து, வெறிநாய் கடி, வீதிகள் தோறும் சுற்றித்திரியும் 10க்கும் மேற்பட்ட நாய்கள், நடைபாதைகள் ஆக்கிரமிப்பு, தீ விபத்துகள், ஆங்காங்கே குப்பைக்கு தீ வைப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால், மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக வேலை செய்யும் ரகு என்பவரின் மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுரக் ஷாவை, புகழேந்தி என்பவர் வளர்க்கும், 'ராட் வைலர்' ரக நாய்கள் கடித்து குதறின. இது குறித்து, சம்பந்தப்பட்டவரிடம் பகுதிவாசிகள் அறிவுறுத்தியும் கண்டுகொள்ளாததால் ஏற்பட்ட பிரச்னை என்பது விசாரணையில் உறுதியானது.
'அதிகாரிகள் வார்டுகள் தோறும் கள ஆய்வு செய்து, மக்களோடு கலந்துரையாடி பகுதியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயன்றாலே, இதுபோன்ற பெரும்பாலான பிரச்னைகளுக்கு, உடனுக்குடன் தீர்வு காணப்பட்டிருக்கும்.
'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல, ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்ட பிறகே, அதிகாரிகள் துாக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கின்றனர். பெயரளவில் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். அதன்பின் மீண்டும் 'கோமா' நிலைக்கு சென்று விடுகின்றனர்' என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கள ஆய்வு
கடந்தாண்டு மே மாதம் சென்னை மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற ராதாகிருஷ்ணன், ஆய்வுப்பணியின்போது, மக்கள் பிரச்னை குறித்து கண்காணிக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
பகுதிவாசிகளை எளிதில் அணுகும் வகையில், மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். காலை, மாலையில் பகுதி வாரியாக, மக்கள் சேவைக்கான பணிகள் குறித்து, அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள், வார்டு சபை, குடியிருப்போர் நலச்சங்கத்தினர், குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகள் தங்கள் தரப்பு புகார்களை தெரிவிக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.
அதற்கு ஈடாக, அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் உள்ளிட்ட கூடுதல் பணிகள் குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டிருந்தார்.
அவப்பெயர்
ஆனால், அதிகாரிகள், அதில் எதையும் கண்டுகொள்ளாமல், கமிஷனரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டுள்ளனர். அதையும் கடந்து, பொதுமக்கள் மாநகராட்சியின் பொது புகார் எண்ணில், புகார் பதிவு செய்தாலும், எந்த பயனும் இல்லை.
இதனால், விபத்து, உயிர் பலி அசம்பாவிதங்களுக்கு எதாவது ஒருவகையில் அதிகாரிகளும் காரணமாகின்றனர்.
எனவே, அவர்கள் மீதும், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இந்த விவகாரத்தில், ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் அலட்சிய அதிகாரிகள் மீது, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நடவடிக்கை எடுப்பதில்லை
தெரு நாய் தொல்லை, சாலையில் திரியும் மாடுகளால் மக்கள் பாதிக்கப்படுவது, சாலை மற்றும் அரசு நிலம் ஆக்கிரமிப்பு, சேதமடைந்த சாலைகளால் ஏற்படும் விபத்துகள், பயணியர் நிழற்குடை இல்லாமை என, மாநகராட்சி எல்லைகளில், பிரச்னைகள் தொடர்கின்றன. அவை குறித்து, உரிய புகார் செய்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுப்பதில்லை. அவர்கள், 'ஏசி' அறையில், ஒப்பந்ததாரர்களுடன் நடத்தும் பேச்சையை 'மக்கள் சேவை' என இருந்து விடுகின்றனர். முறைகேடான தொழிற்சாலை, கிடங்குகள் குறித்தும், கண்டு கொள்வதில்லை.
- பி.ரமேஷ், 54;
சமூக ஆர்வலர், அம்பத்துார்.

