/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 பச்சிளம் குழந்தைகளுக்கு அரிய வகை அறுவை சிகிச்சை எழும்பூர் மருத்துவமனையில் மறுவாழ்வு
/
10 பச்சிளம் குழந்தைகளுக்கு அரிய வகை அறுவை சிகிச்சை எழும்பூர் மருத்துவமனையில் மறுவாழ்வு
10 பச்சிளம் குழந்தைகளுக்கு அரிய வகை அறுவை சிகிச்சை எழும்பூர் மருத்துவமனையில் மறுவாழ்வு
10 பச்சிளம் குழந்தைகளுக்கு அரிய வகை அறுவை சிகிச்சை எழும்பூர் மருத்துவமனையில் மறுவாழ்வு
ADDED : நவ 29, 2025 03:30 AM
சென்னை: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 10 பச்சிளம் குழந்தைகளுக்கு அரிய வகை அறுவை சிகிச்சை செய்து, மறு வாழ்வு வழங்கப்பட்டுள்ளது.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், ஆண்டுதோறும், 12,000 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இதில், பச்சிளம் குழந்தைகளுக்கு, அரிய வகையான அறுவை சிகிச்சைகள் செய்து, மறுவாழ்வு வழங்கப்பட்டிருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ்.மதிவாணன், அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் சங்கரபாரதி, பச்சிளம் குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் முத்துகுமரன் ஆகியோர் கூறியதாவது:
சில பச்சிளம் குழந்தைகளுக்கு, மரபணு குறைபாடு உட்பட பல காரணங்களால், பிறக்கும்போதே, உணவுக்குழாய் மற்றும் மூச்சுக்குழாய் ஒன்றாக ஒட்டி காணப்படும். இதனால், அந்த குழந்தைகளால், வாய் வழியே உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
இதற்கு முதற்கட்டமாக, கேஸ்ட்ரோக்டமி சிகிச்சை முறையில், அந்த வகையான குழந்தைகளுக்கு, வயிற்றில் சிறிய குழாய் பொருத்தப்பட்டு, அதன் வழியே உணவு வழங்கப்படும்.
சில மாதங்களுக்கு பின், பெருங்குடலில் இருந்து குறிப்பிட்ட அளவு பகுதி எடுக்கப்பட்டு, தடைப்பட்ட உணவு குழாயில் பொருத்தப்படும்.
இந்த வகையான சிகிச்சை தற்போது, மூன்று குழந்தைகளுக்கு வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் நலமாக உள்ளனர்.
அதேபோல், பிறக்கும்போதே சிறுநீர் பாதை அடைப்பால் பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்த குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். பெருங்குடலில் குறிப்பிட்ட பகுதியில் நரம்புகள் இல்லாததால், மூன்று பச்சிளம் குழந்தைகள் மலம் கழிக்க முடியாமல் அவதியடைந்தனர்.
அந்த வகையான குழந்தைகளுக்கு, வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல்,ஆசனவாய் வழியே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக, ஆசனவாய் வழியே பெருங்குடல் வெளியே எடுக்கப்பட்டு, நரம்புகள் இல்லாத பகுதி அகற்றப்பட்டது.
பின், மீண்டும், நரம்புகளுடன் கூடிய குடல் பகுதி, ஆசனவாய் பகுதியுடன் இணைக்கப்பட்டது. இந்த சிகிச்சைகள் மிகவும் சிக்கலானது.
இந்த அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
ஆனால், எழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டது. குழந்தைகள் நலமுடன் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

