/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல்
/
விமானத்தில் கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல்
ADDED : மார் 08, 2024 12:12 PM

சென்னை, சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும்
தனியார் பயணியர் விமானத்தில், பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த அதிகாரிகள், சிறப்பு அனுமதி பெற்று, சென்னை விமான நிலையத்தின் உள்பகுதியில் பதுங்கி, நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து தனியார் விமானம் சென்னை வந்தது. பயணியர் இறங்கிச் சென்றதும், சென்னை விமான நிலையத்தில், 'கிரவுண்ட் ஸ்டாப்' எனும் தரை கட்டுப்பாட்டு பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மூன்று பேர், அந்த விமானத்திற்குள் அவசரமாக ஏறினர்.
சிறிது நேரத்தில் பின்பக்கம் வழியாக தரையிறங்கி நடந்து சென்றனர்.
இதை, ரகசியமாக கண்காணித்து வந்த அதிகாரிகள், மூவரையும் நிறுத்தினர். அவர்களை சோதனையிட்டதில், உள்ளாடைகளுக்குள் சிறிய அளவில் தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சல்களை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
மூன்று பேரிடம், இரண்டு கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு 1.2 கோடி ரூபாய். தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். இம்மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதோடு சிங்கப்பூரில் இருந்து இந்த தங்க கட்டிகளை கடத்தி வந்து, இவர்களிடம் கொடுத்து, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்து வரச் சொன்ன கடத்தல் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

