ADDED : ஜூன் 12, 2026 03:04 AM

ஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணி, சுதந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரமிளா, 42; தனியார் வங்கி துாய்மை பணியாளர். கடந்த 25-ம் தேதி, அவசரமாக உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது, வீட்டின் கதவை பூட்டாமல், தாழ்ப்பாள் மட்டும் போட்டு சென்றார்.
வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த 11 சவரன் நகைகள், 15,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
அதே தெருவில் வசிக்கும் விஷ்ணுகுமார், 42, என்பவர், இதேபோன்று வீட்டை பூட்டாமல் வெளியே சென்று திரும்பியபோது, கதவு உள் புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவைத் தட்டியதும், உள்ளே இருந்த நபர் கதவை திறந்து தப்பியோடினார். பின், பீரோவை பரிசோதித்ததில், 12 சவரன் நகைகள் மற்றும் 30,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது.
இரு சம்பவங்கள் குறித்து விசாரித்த ஐஸ் ஹவுஸ் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், 25, என்பவரை கைது செய்து, 21 சவரன் நகைகள் மற்றும் 30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
