ADDED : அக் 16, 2024 12:07 AM
சென்னை, சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக நேற்று, 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன; 12 விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து அதிகாலை, 1:20 மணிக்கு, சிங்கப்பூர் புறப்படும் விமானம்; காலை, 8:40 மணிக்கு மஸ்கட் செல்லும் விமானம்; மதியம், 12:25 மணிக்கு கோவை செல்லும் விமானம்.
மாலை, 3:55 மணிக்கு டில்லி செல்லும் விமானம்; மாலை 4:40 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும் விமானம் என, ஐந்து விமான சேவைகள், பயணியர் குறைவு மற்றும் மோசமான வானிலையால் நேற்று ரத்து செய்யப்பட்டன
மஸ்கட்டில் இருந்து காலை, 7:25 மணி; புவனேஷ்வரில் இருந்து காலை, 10:45 மணி; கோவையில் இருந்து, 3:15 மணி; டில்லியில் இருந்து மாலை 3:20 மணி; விசாகப்பட்டினத்தில் இருந்து இரவு, 7:50 மணிக்கு சென்னை வர வேண்டியவை என, ஐந்து விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
தாமதம்
மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து வருகை, புறப்பாடு என, நேற்று காலை 10:35 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, 12 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது
சென்னையில் இருந்து விஜயவாடா, சிங்கப்பூர், கோல்கட்டா, மும்பை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள், 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன
சிங்கப்பூர், மும்பை, பெங்களுரூ, கோல்கட்டா, கன்னுார், டில்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள், 1:50 மணி நேரம் தாமதமாக வந்தன.
பாதிப்பு இருக்கும்!
கனமழை தொடர்வதால், விமான சேவைகளில் பாதிப்பு இருக்கக்கூடும். எனவே, பயணியர் புக்கிங் செய்த விமான நிறுவனங்களின் இணையதளத்தில் சென்று, தற்போதைய நிலை அறிந்து, விமான நிலையத்திற்கு வரவும். விபரம் தெரியாமல் வந்து அலைய வேண்டாம்.
- சென்னை விமான நிலைய அதிகாரிகள்