/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் மாநகராட்சியில் 24 மணி நேரம்! தடையின்றி குடிநீர் சோதனை முயற்சியாக 5 வார்டில் அமலாகிறது
/
தாம்பரம் மாநகராட்சியில் 24 மணி நேரம்! தடையின்றி குடிநீர் சோதனை முயற்சியாக 5 வார்டில் அமலாகிறது
தாம்பரம் மாநகராட்சியில் 24 மணி நேரம்! தடையின்றி குடிநீர் சோதனை முயற்சியாக 5 வார்டில் அமலாகிறது
தாம்பரம் மாநகராட்சியில் 24 மணி நேரம்! தடையின்றி குடிநீர் சோதனை முயற்சியாக 5 வார்டில் அமலாகிறது
ADDED : ஏப் 24, 2024 11:39 PM

தாம்பரம்,
ஒடிசா மாநிலத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போன்று, 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் திட்டம், தாம்பரம் மாநகராட்சியில் அமல்படுத்தப்பட உள்ளது. சோதனை முயற்சியாக, ஐந்து வார்டுகளில், 18.6 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தை அடுத்த பழைய சீவரம், மேலச்சேரி, வில்லியம்பாக்கம் பகுதிகளில், பாலாறு படுகையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சியில் எஞ்சியுள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ குடிநீர் வாயிலாக குடிநீர் பெறப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளில், உள்ளூர் குடிநீர் ஆதாரம் வாயிலாக தண்ணீரை உறிஞ்சி, சுத்திகரிப்பு செய்து வழங்குகின்றனர்.
கோடைக்காலத்தில், குடிநீர் வழங்கும் ஏரிகள் வற்றுவதாலும், நிலத்தடி நீர் குறைவதாலும், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில், மக்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய, மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் மூவரசம்பட்டு, திரிசூலம் பகுதிகளில் உள்ள கல் குவாரி தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, பல்லாவரம் மண்டல மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக, நாள்தோறும் 2 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இதற்காக, மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திற்கு, 1,000 லிட்டருக்கு, 32.66 ரூபாய் கட்டணமாக செலுத்தப்படுகிறது.
அடுத்தகட்டமாக, கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் சிறப்பான முறையில் செயல்பாட்டில் உள்ளது. அதேபோல், தாம்பரத்திலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, இங்குள்ள அதிகாரிகள் ஒடிசா சென்று ஆய்வு மேற்கொண்டு திரும்பினர்.
தொடர்ந்து முதல் கட்டமாக, 2, 3வது மண்டலங்களில் உள்ள 24,26,22,23,25 ஆகிய ஐந்து வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு, 18.6 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட செம்பாக்கம், பெருங்களத்துார், மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை பகுதிகளுக்கு மெட்ரோ குடிநீரோ, பாலாறு குடிநீரோ வினியோகம் செய்யப்படுவதில்லை.
இப்பகுதிகளுக்கு உள்ளூர் நீராதாரங்கள் வாயிலாக தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்கின்றனர். அதனால், இணைப்பு பகுதிகளுக்கும் குடிநீர் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

