/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
30 ஆண்டாக கழிவு நீர் பிரச்னை: தவிக்கும் வாரிய குடியிருப்பு மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்
/
30 ஆண்டாக கழிவு நீர் பிரச்னை: தவிக்கும் வாரிய குடியிருப்பு மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்
30 ஆண்டாக கழிவு நீர் பிரச்னை: தவிக்கும் வாரிய குடியிருப்பு மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்
30 ஆண்டாக கழிவு நீர் பிரச்னை: தவிக்கும் வாரிய குடியிருப்பு மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்
ADDED : டிச 21, 2024 12:29 AM

ஆவடி, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கடந்த 1993ல் உருவாக்கப்பட்டது. இங்கு, ஆறு பிளாக்கில், 5,000 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 30 அடி அகல மழைநீர் வடிகால் கட்டப்பட வேண்டும். ஆனால், 5 அடி அகல வடிகால் தான் உள்ளது.
பொதுப்பணித்துறை அரசாணை 195ன்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்தது. ஆனால், 30 அடியாக விரிவாக்கம் செய்யாமலே, 2004ல் ஆவடி நகராட்சியிடம் வாரியம் ஒப்படைத்தது.
இதனால், ஒவ்வொறு மழை காலத்திலும் 30 அடி கால்வாயில் பெருக்கெடுக்கும் மழை நீர் கலந்த கழிவுநீர், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள 5 அடி வடிகாலில் வெளியேறி, குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்து விடுகிறது.
கடந்த 2015 பருவமழையின்போது, இப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு பிரச்னை பூதாகரமானது. மேலும், கால்வாய் திறந்தவெளியாக உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, 2015ல், நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. திருவள்ளூர் கலெக்டர், ஆவடி மாநகராட்சி கமிஷனர், மேயர் உட்பட பலருக்கும் புகார் மனு அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
கடந்த பெஞ்சல் புயல்; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் போது பெய்த கனமழையிலும், வீடுகளுக்குள் மழை நீருடன், கழிவு நீர் புகுந்தது. இந்நிலையில், ஆவடி வீட்டுவசதி வாரிய மக்கள், 70க்கும் மேற்பட்டோர், ஆவடி மாநகராட்சியை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தை உயிரிழப்பு
இது குறித்து பாதிக்கப்பட்டோர் கூறியதாவது:
கடந்த 2015 ஆக., 5ம் தேதி இரவு, கால்வாயை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை விளையாடும்போது, மேற்கூறிய கால்வாய் விழுந்து உயிரிழந்தது. அதன் பிறகும் நகராட்சி அதிகாரிகள் விழித்துக் கொள்ளவில்லை.
பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு கால்வாய் வாயிலாக பாதிப்பு ஏற்படாதவாறு, ஆவடி நகராட்சி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, கடந்த 2020ல், ஆவடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தரணிதரன் என்பவர், மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணையின்போது, இந்த கால்வாய் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது என, ஆவடி நகராட்சி தவறான தகவலை தெரிவித்தது. ஆனால், 2004ல், தமிழ் வீட்டு வசதி வாரியம், ஆவடி நகராட்சியிடம் ஒப்படைத்து உள்ளது என, பொதுப்பணித்துறை நிரூபித்தது.
இதையடுத்து, 'தவறான தகவல் தெரிவித்ததற்கு, மனித உரிமை ஆணையம் சமூக ஆர்வலர் தரணிதரனுக்கு 25,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கவும், கால்வாய் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனவும், அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், இந்த பிரச்னைக்கு எந்த தீர்வும் காணவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மழைநீர் வடிகாலில், கழிவுநீர் கலக்கக் கூடாது என உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் 2023ல் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆவடி மாநகராட்சியை பொறுத்தவரை, மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது.
- தரணிதரன், சமூக ஆர்வலர்.
கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண, 20 கோடி ரூபாய் மதிப்பில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு, அண்ணா பல்கலை நிபுணர் குழு கால்வாய் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்கிறது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடன், வடிகால் அமைக்கும் பணி துவங்கும்.
- ரவி, வார்டு கவுன்சிலர்.
பாதிக்கப்படும் மக்களிடம் கருத்து எதுவும் கேட்காமல், அண்ணா பல்கலை குழுவினர் ஆய்வு மேற்கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. கால்வாய் செல்லும் 2.5 கி.மீ., துாரத்திற்கு நிலத்தடி நீர் மாசடைந்து உள்ளது. எனவே, கால்வாயை சீரமைக்க வேண்டும் என, தமிழ் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.
- ரமேஷ்பாபு, 42,
சமூக ஆர்வலர், ஆவடி.