ஆவடி அருகே தொழிற்சாலைக்குள் பதுங்கிய 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
ஆவடி அருகே தொழிற்சாலைக்குள் பதுங்கிய 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
ADDED : அக் 20, 2026 05:46 PM

ஆவடி: ஆவடி அருகே, தொழிற்சாலைக்குள் பதுங்கிய 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ஆவடி அடுத்த கண்ணப்பாளையம், கைதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர், ‘ஸ்ரீ விநாயகா ஹைடெக் கம்பெனி’ என்ற பெயரில் இரும்பு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் ஆயுத பூஜையை முன்னிட்டு, ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தைச் சுத்தம் செய்தபோது, கழிவுநீர் கால்வாயில் பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர் ரீகன் அங்கு சென்று ஆய்வு செய்தனர். சீற்றத்துடன் பதுங்கியிருந்த 8 அடி நீளம், 40 கிலோ இந்திய வகை மலைப்பாம்பை, அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர். பின், செங்குன்றம் வனச்சரகர் வாயிலாக, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த புலிக்குன்றம் காப்புக்காட்டில் விடுவிக்கப்பட்டது.
இது குறித்து தன்னார்வலர் ரீகன் கூறுகையில், ‘‘ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலைப்பாம்புகள் இல்லை. காடுகள் நிறைந்த பகுதிகள் வழியாக தொழிற்சாலைக்கு வந்த கனரக லாரியில் பாம்பு ஏறி, வளாகத்துக்குள் பதுங்கியிருக்கலாம்,” என்றார்.
* கிணற்றில் கிடந்த பாம்பு
குன்றத்துார் அருகே மணிமங்கலம், கச்சேரிமேடு தெருவில் கன்னியப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கைவிடப்பட்ட கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 5 அடி நீள நல்ல பாம்பு ஒன்று தவறி விழுந்தது. பாம்பு உயிருக்கு போராடியதைப் பார்த்த பகுதிமக்கள், இது குறித்து, நேற்று முன்தினம் குன்றத்துார் வனச்சரகர் மாணிக்கவாசகத்திடம் தெரிவித்தனர். குன்றத்துார் வனத்துறை ஊழியர்கள் மற்றும் பாம்பு மீட்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று, 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கயறு கட்டி இறங்கி, பாம்பை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, நல்லுார் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
