கோவாவிற்கு புறப்பட தயாரான விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவாவிற்கு புறப்பட தயாரான விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 20, 2026 06:05 PM
சென்னை: சென்னையில் இருந்து கோவா புறப்பட தயாராக இருந்த, ‘இண்டிகோ’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இச்சம்பவத்தால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் மாலை 5:40 மணிக்கு, ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமானம் பயணியர் மற்றும் விமான ஊழியர்களுடன் புறப்படத் தயாராகவிருந்தது.
இதில், 176 பயணியர் மற்றும் ஆறு ஊழியர்கள் இருந்தனர்.
விமானம் ஓடுபாதைக்குச் செல்லும் முன், அதன் உட்பகுதிகளைப் பணிப்பெண்கள் சோதனையிட்டனர். அப்போது கழிப்பறையில் ஒட்டப்பட்டிருந்த கடிதத்தில், விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், நடுவானில் அவை வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து, சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டது.
விரைந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விமானத்தைச் சோதனையிட்டனர். பயணியர் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, அவர்களது பைகள் மற்றும் விமான ஊழியர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஐந்து மணி நேர சோதனையில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதனால், மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இதையடுத்து, ஐந்து மணி நேர தாமதத்துக்குப் பின், இரவு 11:10 மணிக்கு விமானம் கோவா புறப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து, விமான நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
