துர்கா பூஜையை முன்னிட்டு எஸ்.எம்.சி.ஏ., ‘வினாடி – வினா’
துர்கா பூஜையை முன்னிட்டு எஸ்.எம்.சி.ஏ., ‘வினாடி – வினா’
ADDED : அக் 20, 2026 06:05 PM

சென்னை: ‘சவுத் மெட்ராஸ் கல்ச்சுரல் அசோசியேஷன்’ எனும் எஸ்.எம்.சி.ஏ.,வின், 48ம் ஆண்டு துர்கா பூஜை நிகழ்ச்சி ‘சாரதோத்சவம்’ எனும் தலைப்பில் நேற்று நடந்தது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மந்த்ரா கார்டென்ஸ் அரங்கில், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான வினாடி -– வினா போட்டி நேற்று நடந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதற்கட்டத் தேர்வின் அடிப்படையில், ஆறு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகின. இதில், முதல் மூன்று இடங்கள் பெற்ற அணிக்கு ரொக்கப்பரிசும், அடுத்த மூன்று இடங்கள் பிடித்த அணிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
முறையே இதில், முதல் பரிசை ஜெயகாந்தன், சங்கியா அணியும்; இரண்டாம் பரிசை அபிஜித், பிரவின் அணியும்; மூன்றாம் பரிசை ராஜா, அஸ்வத் அணியும் வென்றன.
நான்காம் இடத்தை உத்பவ், ஸ்ரேயஸ் அணியும்; ஐந்தாம் இடத்தை கிருஷ்ணா, சம்யுக்தா அணியும்; ஆறாம் இடத்தை பிரசஞ்சித், பிரியதர்ஷன் அணியும் பிடித்தன.
‘எக்ஸ் குவிஸ் இட்’ நிறுவனம் சார்பில், வினாடி -– வினா நிபுணர் அரவிந்த் ராஜிவ் போட்டியை நடத்தினார். மகேஸ், அஜய், அஜித், கவுசிகா ஆகியோரும் பங்களித்தனர்.
வரலாறு, அறிவியல், பொறியியல், கலை, பண்பாடு, இலக்கியம், உலகம் மற்றும் பொது அறிவு சார்ந்த சுவாரஸ்யமான கேள்விகள் இடம்பெற்றன. அவை போட்டியாளர்கள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
‘சவுத் மெட்ராஸ் கல்ச்சுரல் அசோசியேஷன்’ துணைத் தலைவரும், மூத்த மருத்துவருமான அனிதா ரமேஷ், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
