தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : அக் 20, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளம்பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி

ராயபுரம்: ராயபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு ‘டெலிகிராம்’ செயலி மூலம் பரத்குமார் என்பவர் அறிமுகமாகி, தன்னை ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ நிபுணர் எனக் அறிமுகப்படுத்தியுள்ளார். பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, 8 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்துள்ளார். ஆனால், லாபத்தொகையோ, அசலோ வழங்கவில்லை. முதலீடு செய்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, இரண்டரை ஆண்டுகளாக இழுத்தடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை அடுத்து, ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

‘யூ டியூப்’ விமர்சனம்: வாலிபர் தற்கொலை

கானத்துார்: முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ், 26. இவர், ‘ஹரீஷ் கேபிட்டல் அண்டு டிஜிட்டல் சர்வீஸ்’ என்ற பெயரில் ‘ஆன்லைன்’ வாயிலாக நிதி ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்தார். இவரது பதிவுகளை மையமாக வைத்து, ஜான்சன் சாமுவேல் என்பவர், ‘டார்க் வேர்ல்டு ஆப் பைனான்ஸ் இன்ப்ளூயன்சர்ஸ்’ என்ற தலைப்பில், ஹரீஷுக்கு எதிராக யூ டியூப் சேனலில் விமர்சனம் வெளியிட்டு வந்ததாகவும், இதனால் ஹரீஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

13வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

வியாசர்பாடி: எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 15. கொடுங்கையூரில் வீடு புகுந்து 35,000 ரூபாய் திருடிய வழக்கில் சிக்கிய ராஜேஷ்குமாரை, நேற்று பெற்றோருடன் எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரித்தனர். பணத்தை வீட்டின் 13வது மாடியில் மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். பணத்தை எடுக்கச் சென்றபோது, தப்ப முயன்ற அவர் தவறி விழுந்து உயிரிழந்தார். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

நிறுவனத்தில் கையாடல் செய்த பெண் ஊழியர் கைது

வடக்கு கடற்கரை: மண்ணடி, மூர் தெருவில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் சோமசேகர், 55. இவரது நிறுவனத்தில், திருவொற்றியூரைச் சேர்ந்த மேனகா, 28, என்பவர், கணக்காளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2021 முதல் 2026 வரையிலான நிறுவனக் கணக்குகளைச் சோமசேகர் சரிபார்த்தபோது, 14.23 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. மேனகாவிடம் விசாரித்தபோது, 10 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள 4.23 லட்சம் ரூபாயை ஜூலை மாதத்துக்குள் வழங்குவதாகக் கூறியுள்ளார். ஆனால், திருப்பித் தரவில்லை. இது குறித்து விசாரித்த வடக்கு கடற்கரை போலீசார், மேனகாவை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

போதை ஊசியால் இளைஞர் பலி

புழல்: புழல், காவாங்கரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ், 25; எலக்ட்ரீஷியன். போதைக்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். விசாரணையில், போதை ஊசி செலுத்திக் கொண்டது தெரியவந்தது. போதை மாத்திரைகளை சப்ளை செய்த பாடியநல்லுாரைச் சேர்ந்த சதீஷ்குமார், 39, கதிர்வேடைச் சேர்ந்த கார்த்திக், 27, ஆகியோரையும், நேற்று புழல் சுடுகாடு அருகே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பூட்டிய அறைக்குள் சிக்கிய சிறுவர்கள் மீட்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், பெரியார் நகர், கமலா நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் அன்புகுமார், 42; எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர். இவருக்கு மனைவி, 10 வயது மகள், 4 வயது மகன் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டின் அறைக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், திடீரென கதவு மூடியதால் வெளியே வர முடியாமல் சிக்கினர். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், ‘காம்பி டூல்’ கருவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்து சிறுவர்களை பத்திரமாக மீட்டனர்.

‘செப்டோ’ ஊழியரின் பைக் திருடியவர் பிடிபட்டார்

கொடுங்கையூர்: கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகரை சேர்ந்த ரஞ்சித்குமார், 24; ‘செப்டோ’ ஊழியர். கடந்த 16ம் தேதி, இவரது ‘யமஹா ஆர்15’ பைக் திருட்டு போனது. விசாரித்த கொடுங்கையூர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, 26, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவுடன் மேற்கு வங்க வாலிபர்கள் சிக்கினர்

அடையாறு: , மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அகிபுல் ஷேக், 30, ரஹிபுல், 25; கட்டட தொழிலாளர்கள். இருவரும், சொந்த ஊருக்கு சென்று ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, நேற்று சென்னை, அடையாறு பகுதியில் வியாபாரி ஒருவரிடம் கொடுக்க முயன்றபோது, அடையாறு போலீசார் மடக்கி பிடித்தனர்; 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us