/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெரு நாயை கொன்ற மர்ம ஆசாமிக்கு வலை
/
தெரு நாயை கொன்ற மர்ம ஆசாமிக்கு வலை
ADDED : ஏப் 20, 2025 07:51 PM
திருவொற்றியூர்:வயிற்றில் கல்லைத் துாக்கிப்போட்டு, தெரு நாயை கொலை செய்த மர்ம ஆசாமியை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, பெரிய மேட்டுப்பாளையம் முதல் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 47. இவர், ஓராண்டாக சாலையோரம் சுற்றித்திரிந்த நாய் ஒன்றிற்கு, உணவளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 15 ம் தேதி காலை, பெரியமேட்டுபாளையம் இரண்டாவது தெரு, பெருமாள் கோவில் அருகே, அந்த தெரு நாய் சுற்றித் திரிந்தது.
அப்போது, அவ்வழியே சென்ற மர்ம ஆசாமி ஒருவரை பார்த்து, அந்த நாய் குரைத்துள்ளது. இதனால், பயந்து போன அவர், அருகே இருந்த கல்லை துாக்கி, நாயின் வயிற்றில் போட்டு விட்டு தப்பினார்.
அக்கம் பக்கத்தினர், நாய்க்கு உணவளித்து வரும் சரஸ்வதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை மீட்டு, வேப்பேரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு, மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்த நாய், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
சரஸ்வதி அளித்த புகாரில், திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து, தெரு நாய் மீது கல்லை போட்டு கொன்ற, மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். நாயின் உடல், பிரேத பரிசோதனைக்காக, வேப்பேரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

