/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரிகள் இடையே வாட்ஸாப்'பில் வார்த்தை போர் அடையாறில் கிடப்பில் போடப்பட்ட கொசு ஒழிப்பு பணி
/
அதிகாரிகள் இடையே வாட்ஸாப்'பில் வார்த்தை போர் அடையாறில் கிடப்பில் போடப்பட்ட கொசு ஒழிப்பு பணி
அதிகாரிகள் இடையே வாட்ஸாப்'பில் வார்த்தை போர் அடையாறில் கிடப்பில் போடப்பட்ட கொசு ஒழிப்பு பணி
அதிகாரிகள் இடையே வாட்ஸாப்'பில் வார்த்தை போர் அடையாறில் கிடப்பில் போடப்பட்ட கொசு ஒழிப்பு பணி
ADDED : மார் 20, 2025 12:14 AM
அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், பெசன்ட் நகர், அடையாறு, கோட்டூர்புரம், கிரீன்வேஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அடையாறு மண்டலம், 13 வார்டுகளை உடையது.
இந்த மண்டலத்தில், அடையாறு ஆறு, வீராங்கால் மற்றும் பகிங்ஹாம் கால்வாய் உள்ளதால், கொசு உற்பத்தி அதிகமாக இருக்கும்.
ஆனால், சில மாதங்களாக கொசு ஒழிப்பு பணி முறையாக நடக்கவில்லை. இதனால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த மண்டலத்தில், மூன்று துப்புரவு அலுவலர்கள், 9 சுகாதார ஆய்வாளர்கள், ஒரு பூச்சியியல் வல்லுனர் மற்றும் 275 மலேரியா தடுப்பு ஊழியர்கள் உள்ளனர்.
மேலும், ஆறு புகை பரப்பும் இயந்திரங்கள், 22 மருந்து தெளிக்கும் கையடக்க இயந்திரங்கள் உள்ளன. இருப்பினும், கொசு ஒழிப்பு பணி நடக்கவில்லை.
இதை, கடந்த மண்டல குழு கூட்டத்தில், ''கொசுவை ஒழிக்கிறீர்களா அல்லது விரட்டுகிறீர்களா'' என, அனைத்து கவுன்சிலர்களும், பூச்சியியல் வல்லுனரிடம் கேள்வி எழுப்பினர்.
கொசு ஒழிப்பு மருந்து உள்ளிட்ட உபகரணங்களை முறையாக வார்டுகளுக்கு வினியோகிப்பதில்லை என்ற புகார் உள்ளது.
மேலும், கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பதிலும் தில்லுமுல்லு நடந்துள்ளது. இதன் தொடர்பாக, மண்டல சுகாதார அதிகாரி மற்றும் பூச்சியியல் வல்லுனர் இடையே, ஒரு மாதமாக பனிப்போர் நடக்கிறது.
அதுவும், தனிப்பட்ட ரீதியிலும், துறையின் வாட்ஸாப் குழுவிலும், இருவரும் பணி தொடர்பாகவும், கணக்கு வழக்கு தொடர்பாகவும் மாறி மாறி குற்றம் சாட்டி, வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக, கொசு ஒழிப்புக்கான மருந்து, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள், வார்டுகளுக்கு முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா, கொள்முதல் அளவும், வார்டுகளுக்கு வழங்கிய அளவும் சமமாக உள்ளதா என, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த களேபரத்தால், கொசு ஒழிப்பு பணியை கிடப்பில் போட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் தலையிட்டு, வாட்ஸாப் வார்த்தை போருக்கு முற்றுப்புள்ளி வைத்து, கொசு ஒழிப்பு பணியை வேகப்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தினர்.