/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விற்பனை சரிந்த 'அம்மா' உணவகங்களில் ரூ.40 லட்சம் வீணடித்ததாக குற்றச்சாட்டு
/
விற்பனை சரிந்த 'அம்மா' உணவகங்களில் ரூ.40 லட்சம் வீணடித்ததாக குற்றச்சாட்டு
விற்பனை சரிந்த 'அம்மா' உணவகங்களில் ரூ.40 லட்சம் வீணடித்ததாக குற்றச்சாட்டு
விற்பனை சரிந்த 'அம்மா' உணவகங்களில் ரூ.40 லட்சம் வீணடித்ததாக குற்றச்சாட்டு
ADDED : நவ 13, 2024 02:47 AM

அடையாறு:அடையாறு மண்டலக்குழு கூட்டம், மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன் முன்னிலையில், மண்டலக் குழு தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
இதில், 10 கவுன்சிலர்கள், மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கவுன்சிலர்கள் பேசியதாவது:
இ.சி.ஆர்., திருவான்மியூர் பகுதியில் லேசான மழைக்கே வெள்ளம் தேங்குகிறது. கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை எதிரே, ஆட்டோ நிறுத்தம் அமைப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும்.
அடையாறு, கிண்டி பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. தரமான கொசு ஒழிப்பு மருந்து பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம்.
மறுசீரமைப்பு செய்யப்பட்ட, வேளச்சேரி நாட்டார் குளத்தை திறக்க வேண்டும். ஒரு பெயருக்கு, இரண்டு முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை அனுப்புவதால் வாக்காளர்கள் குழப்பம் அடைகின்றனர்.
பயன்பாட்டில் இல்லாத, வேளச்சேரி -தரமணி சாலை மூடு கால்வாயை ஆய்வு செய்து, மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
'அம்மா' உணவகங்களில் விற்பனை கணிசமாக சரிந்துவிட்டது, விற்பனையை அதிகரிப்பதற்கு பதில், விற்பனை இல்லாத உணவகங்களுக்கு, மண்டல அதிகாரியிடம் உரிய ஒப்புதல் பெறாமல் 40 லட்சம் ரூபாயில் பாத்திரம் உள்ளிட்ட இதர பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் வரிப்பணம் வீணாகிறது. இதுகுறித்து உரிய விளக்கம் தர வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
இதற்கு, சுகாதார அதிகாரி சிவகுமார், பதில் கூறாமல் அமைதி காத்தார். தொடர்ந்து, கேட்டதற்கு சுகாதார உயர் அதிகாரியிடம் கேட்டு வாங்கியதாக கூறினார். பதிலில் திருப்தி அடையாத கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தொடர்ந்து, உணவகங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்டல குழு தலைவர் கூறினார்.
பூங்கா சீரமைப்பு, பழுதடைந்த மின்கம்பங்கள் புதுப்பிப்பு, கழிப்பறைகள் சீரமைப்பு உள்ளிட்ட, 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

