/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழைய நினைவுகளில் குழந்தைகளாக மாறிய பெரியவர்கள்
/
பழைய நினைவுகளில் குழந்தைகளாக மாறிய பெரியவர்கள்
ADDED : பிப் 10, 2025 03:44 AM

வடபழனி,:அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை ஒன்றிணைக்கும் வகையில், நம் நாளிதழ் சார்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை 'கார்னிவல்- அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில், வடபழனி ‛அஷ்டா ஏ.வி.எம்., அப்பார்ட்மென்ட்' குடியிருப்பில், நேற்று பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கோலாகலமாக நடந்தது.
இந்த நிகழ்ச்சியை, ‛கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், எபிக் டொயோட்டா, அவிஷ்யம், போகா ஈவென்ட்' உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நடத்தின. இதில், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். இதனால், குடியிருப்பே திருவிழாக்கோலம் பூண்டது.
இந்நிகழ்வில், மாட்டு வண்டியில் சிறுவர்களை அழைத்துக் கொண்டு, குடியிருப்பிற்குள்ளே வலம் வந்தனர். தொடர்ந்து உறியடி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மினி மாரத்தான், மேஜிக் ஷோ, சிறுவர்கள் பேஷன் ேஷா, ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.
இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். அனைத்துவித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
எங்கள் குடியிருப்பில் உள்ள 2,000 பேரை, ஒரே இடத்தில் ஒன்றிணைத்து குதுாகலமாக கொண்டாட செய்தது, திருவிழாவில் பங்கேற்றது போன்று இருந்தது. மாட்டு வண்டி, உறியடி என, பழைய நினைவுகளுக்கு சென்று மகிழ்ந்தோம்.
எஸ்.வடுகநாதன், 49,
குடியிருப்பு நலச்சங்க தலைவர்.
பொதுவாக, நான் வீட்டிலேயே இருப்பேன். இன்று வெளியே வந்து ஜாலியாக நடனமாடி மகிழ்ச்சியாக இருந்தேன். மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்றேன்.
எம்.வி.சகஸ்ர, 10;- குடியிருப்புவாசி.
நான் வீட்டிற்குள் மட்டுமே பாட்டு பாடி வந்தேன். தினமலர் நிகழ்வு வாயிலாக, மேடையில் பாட வாய்ப்பு கிடைத்தது. எல்லாரும் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். எங்களை ஒன்றிணைத்ததற்கு நன்றி.
வி.ஆர்.அனுராதா, 43; குடியிருப்புவாசி.
ஒரே இடத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என, அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில், ஆடல் பாடல், மினி மாரத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தினமலர் நாளிதழ் நிறுவனத்திற்கு நன்றி.
எம்.நவீன், 34; குடியிருப்புவாசி.