/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு 'வைரஸ் காய்ச்சல்!' கொசு, கழிவுநீர் பிரச்னைகளால் பரவும் தொற்று
/
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு 'வைரஸ் காய்ச்சல்!' கொசு, கழிவுநீர் பிரச்னைகளால் பரவும் தொற்று
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு 'வைரஸ் காய்ச்சல்!' கொசு, கழிவுநீர் பிரச்னைகளால் பரவும் தொற்று
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு 'வைரஸ் காய்ச்சல்!' கொசு, கழிவுநீர் பிரச்னைகளால் பரவும் தொற்று
ADDED : மார் 05, 2024 12:23 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சளி, வறட்டு இருமல், தொண்டை வலியுடன் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு வாரம் பாதிப்பு இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் முடங்கும் நிலை ஏற்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 2023 பருவமழையின்போது, பெரும்பாலான இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குடிநீரில் கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பிரச்னையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
சிக்கல்
அதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில், மக்களுக்கு ஏற்படும் நோய் தொற்றுகள் பெரியளவில் தடுக்கப்பட்டன.
அதேநேரம், கொசு இனப்பெருக்கம் அதிகரித்தது. கொசு மருந்து தட்டுப்பாடு அதிகரித்ததால், அவ்வப்போது, புகை மருந்து மட்டுமே அடிக்கப்பட்டது. கொசுப்புழு வளரிடங்களை கண்டறிந்து அழிப்பதற்கான மருந்துகள் பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
குறிப்பாக, மழைநீர் வடிகால், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் அதிகம் கொசுக்கள் உருவாகும் சூழல் இருந்தும், தண்ணீரில் தெளிக்கக்கூடிய மருந்துகள் இல்லாததால், அவற்றை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போதும் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
கொசு தொல்லையால், இரவில் பொதுமக்கள் துாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. சளி பாதிப்புடன் துவங்கி, இருமல், காதடைப்பு, தொண்டை வலி, உடல் வலியுடன் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
நான்கு நாட்கள் வரை நீடிக்கும் காய்ச்சல் பாதிப்புக்கு பின், ஒருவாரம் வரை வறட்டு இருமல் பாதிப்பு உள்ளது.
இந்த காய்ச்சல் பாதிப்பு, மடிப்பாக்கம், செம்மஞ்சேரி, ஆலந்துார், கீழ்கட்டளை, உள்ளகரம், ஜமீன் பல்லாவரம் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
முகாம்
அதேபோல், வடசென்னை பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும், காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
மேலும், தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இதுபோன்ற காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள், ஒரு வாரம் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். எனவே, மாநகரில் மருத்துவ முகாம் நடத்தி, வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
டாக்டர்கள் கூறியதாவது:
குளிர்காலத்தில் இருந்து கோடை காலம் துவங்குவதால், பருவநிலையில் ஏற்படும் மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், பெரும்பாலானோர் புறநோயாளிகளாகவே சிகிச்சை பெறுகின்றனர்.
ஆனால், வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து மருத்துவமனைக்கு வருகின்றனர்.
பொதுமக்கள் எவ்வகை குடிநீர் பயன்படுத்தினாலும், காய்ச்சி பருக வேண்டும். சுற்றுப்புறங்களில் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டு சாப்பாடு சாப்பிடுவதன் வாயிலாக, இவ்வகை பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் வழக்கமான அளவில் தான் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. எந்த பகுதியிலும், அதிகமான காய்ச்சல் பாதிப்பு பதிவானதாக இதுவரை தகவல் இல்லை. எனினும், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
- எம்.ஜெகதீசன்,
மாநகர சுகாதார நல அலுவலர்,
சென்னை மாநகராட்சி
- நமது நிருபர் -

