/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில்பதாகையில் வடியாத வெள்ளம் வடிகாலுக்கு செலவிட்ட ரூ.21 கோடி 'அம்போ'
/
கோவில்பதாகையில் வடியாத வெள்ளம் வடிகாலுக்கு செலவிட்ட ரூ.21 கோடி 'அம்போ'
கோவில்பதாகையில் வடியாத வெள்ளம் வடிகாலுக்கு செலவிட்ட ரூ.21 கோடி 'அம்போ'
கோவில்பதாகையில் வடியாத வெள்ளம் வடிகாலுக்கு செலவிட்ட ரூ.21 கோடி 'அம்போ'
ADDED : அக் 18, 2024 12:29 AM

ஆவடி, கோவில்பதாகையில், 21.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைத்தும், மழைநீர் வடியாததால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஆவடியில், 570 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில்பதாகை ஏரியில், இரு கலங்கல் உள்ளன. கலங்கல் ஒட்டியுள்ள ஏரியின் உள்வாயில் பகுதி, பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல், மண் சேர்ந்துள்ளது.
இதனால், சிறிய மழைக்கே ஏரி நிரம்பி, இரு கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறி, கணபதி அவென்யூ வழியாக பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்ந்து மங்களம் நகர், டிரினிட்டி அவென்யூ, எம்.சி.பி. நகர், கிருஷ்ணா அவென்யூ, செகரட்டரி காலனி உள்ளிட்ட பகுதிகள், ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகின்றன.
தொடர் மழையில் கலங்கல் வழியாக வெளியேறும் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கும் போது, ஏரியை ஒட்டியுள்ள கலைஞர் நகர், பிருந்தாவன் நகர் மற்றும் ராஜிவ்காந்தி நகர் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
இங்கு, வெள்ள பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு, 2023 - -24ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில், 21.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும், 5,500 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நீர் வாட்டம் முறையாக ஆய்வு செய்யாமல் வடிகால் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். வடிகால் அமைக்கும் போது மங்களம் நகர், கணபதி அவென்யூவில் தரைப்பாலம் மூடப்பட்டது.
இதனால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், வடிகாலில் வடியாமல், கடந்த இரு நாட்களாக கோவில் பதாகை பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கன்னடபாளையம் முதல் மங்களம் நகர் வரை, 100 மீட்டர் துாரத்திற்கு சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறி உள்ளது.
வெள்ளத்தில் சாலை தெரியாததால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கோவில்பதாகை ஏரியை துார் வாரி, தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கோவில்பதாகை ஏரி, பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ளது. இதனால், மழைநீரை சேமித்து வைக்க முடியாமல், ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் சாலையில் வழிந்து வீணாகிறது.
ஏரியை சுற்றி நீர்வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியை துார்வாரினால் வெள்ள பாதிப்பை தடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில்,'சாலையில் தேங்கும் மழைநீர் வெளியேறதான் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேறுவதற்கு நீர்வளத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.