/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் பலாத்காரம்: நடைபாதை பிரியாணி வியாபாரி கைது
/
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் பலாத்காரம்: நடைபாதை பிரியாணி வியாபாரி கைது
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் பலாத்காரம்: நடைபாதை பிரியாணி வியாபாரி கைது
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் பலாத்காரம்: நடைபாதை பிரியாணி வியாபாரி கைது
ADDED : டிச 26, 2024 06:52 AM

சென்னை: சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, நடைபாதை பிரியாணி வியாபாரியை, போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில் செயல்படும், அண்ணா பல்கலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, 19 வயது பெண், மெக்கானிக்கல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பல்கலை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இவர் அதே பல்கலையில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவருடன், தினமும் மாலை நடைபயிற்சி செல்வது வழக்கம்.
கடந்த 23ம் தேதி நடைபயிற்சி முடித்த பிறகு, இரவு 8:00 மணியளவில், பல்கலை வளாகத்தில், நெடுஞ்சாலை ஆய்வகம் கட்டடம் பின்புறம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர், அவர்களை தன் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் மாணவியுடன் இருந்த நண்பரை தாக்கி, விரட்டி உள்ளார்.
அதன்பிறகு மாணவியிடம், 'நீ மாணவனுடன் பேசிக் கொண்டிருந்த வீடியோ எடுத்துள்ளேன்' எனக் கூறி, பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். மாணவி தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும், அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மாணவி, தனக்கு மாதவிடாய் காலம் எனக் கூறியதும், அந்த மர்ம நபர், பாலியல் சீண்டல் செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
மாணவி தனக்கு நடந்த கொடுமை குறித்து, போலீஸ் கமிஷனர் அருணிடம், நேற்று முன் தினம் மாலை புகார் அளித்தார்.
அவரது உத்தரவின்படி, கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாதேவி தலைமையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
கிண்டி பொறியியல் கல்லுாரி மாணவி அளித்த புகார் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டது. குற்றவாளியை கைது செய்ய, கோட்டூர்புரம் உதவி கமிஷனர் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விசாரணை முடிவில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், 37, என்பவர் கைது செய்யப்பட்டார். அவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர், அண்ணா பல்கலை அருகே, நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவர் வேறு ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. பல்கலை வளாகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் துறை அதிகாரிகளும், பல்கலை பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசித்து, மாணவ - மாணவியர் பாதுகாப்பை மேம்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.