/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை 'மெட்ரோ'வுடன் இணைக்க ஒப்புதல்
/
வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை 'மெட்ரோ'வுடன் இணைக்க ஒப்புதல்
வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை 'மெட்ரோ'வுடன் இணைக்க ஒப்புதல்
வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை 'மெட்ரோ'வுடன் இணைக்க ஒப்புதல்
ADDED : ஆக 02, 2025 01:19 AM
சென்னை, தெற்கு ரயில்வேயிடம் உள்ள கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் தடத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை, தினமும் 100 முறை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, வேளச்சேரி - பரங்கி மலையை இணைக்கும் மேம்பால ரயில் பாதை திட்டப்பணி, 2008ல் துவங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த பணிகள், தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பெரிய, பெரிய கட்டடங்களாக, வணிக நோக்கத்தோடு அமைக்கப்பட்டன.
ஆனால், மத்திய ரயில்வேத்துறை நிர்ணயிக்கும் வாடகை கட்டணம் அல்லது லீசுக்கான தொகையை தர நிறுவனங்கள், வியாபாரிகள் முன்வரவில்லை.
இந்நிலையில், வேளச்சேரி மேம்பால தடத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளாக பேச்சு நடந்து வந்தது.
இதற்கிடையே, தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ரயில்வே வாரியம், கடந்த 30ம் தேதி நடத்திய கூட்டத்தில், வேளச்சேரி மேம்பால ரயில் தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
கடற்கரை - வேளச்சேரி மேம்பால தடத்தை, சென்னை மெட்ரோவிடம் ஒப்படைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, இந்த வழித்தடத்தில் புதிய மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம்.
ரயில் நிலையங்கள் மேம்பாடு, புதிய ரயில்கள் இயக்கம், புதிய இணைப்பு சாலைகள் உருவாக்குதல், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் வசதி மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் வணிக வளாகத்துடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற உள்ளன. இதற்கான, பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'மெட்ரோ'வில் 150 கி.மீ., நடைபாதை
மத்திய அரசு நிதி பெற நடவடிக்கை
சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடங்களில் வாகனம் இல்லாமல் மக்கள் நடந்து செல்வதற்கும், சைக்கிள்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள் ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. சென்னை பெருநகர் பகுதிக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல் திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்தும், அதில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், மூன்று வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வழித்தடங்களில், 150 கி.மீ., நடைபாதை உள்ளிட்ட போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதற்கான நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெறவும் முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.