/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?
/
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?
ADDED : அக் 22, 2024 12:15 AM

சென்னை, வரும் தீபாவளி பண்டிகைக்காக, சென்னையில் இருந்து, 4,900 சிறப்பு பஸ்கள் உட்பட, 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கார்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்ல வேண்டாம் என, அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையொட்டி, வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும், 2,092 பஸ்களுடன், 4,900 சிறப்பு பஸ்கள் என, மூன்று நாட்களும் சேர்த்து, மொத்தமாக, 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பயணியர் சிரமம் இன்றி செல்ல வசதியாக, சென்னையில் இருந்து செல்லும் வெளியூர் பஸ்கள், மூன்று பஸ் நிலையங்களில் இருந்து, பிரித்து இயக்கப்பட உள்ளன. பயணியரின் வசதிக்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் செல்ல வசதியாக, 24 மணி நேரமும் மாநகர இணைப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களோடு, வரும் 28ம் தேதி 700, 29ம் தேதி 2,125, 30ம் தேதி 2,075 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
எங்கிருந்து போகலாம்?
கிளாம்பாக்கம்: புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், திருச்சி, மதுரை, துாத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்
கோயம்பேடு: கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்
மாதவரம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக, ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பஸ்களும், மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
மாற்று வழி
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலுார் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லலாம்.