/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அயோத்தியில் கண் திறந்த பால ராமர் விழாக்கோலம் பூண்டது சென்னை
/
அயோத்தியில் கண் திறந்த பால ராமர் விழாக்கோலம் பூண்டது சென்னை
அயோத்தியில் கண் திறந்த பால ராமர் விழாக்கோலம் பூண்டது சென்னை
அயோத்தியில் கண் திறந்த பால ராமர் விழாக்கோலம் பூண்டது சென்னை
ADDED : ஜன 23, 2024 12:14 AM

அயோத்தியில் பால ராமர் பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனைகளால் விழாக்கோலம் பூண்டது.
அயோத்தியில், ராமர் கோவிலில் குழந்தை வடிவிலான ராமபிரான் பிராணப் பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நேற்று விமரிசையாக நடந்தது. இதை கொண்டாடும் வகையில், சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள பல கோவில்களில், சிறப்பு பூஜைகள், பஜனை மற்றும் அன்னதானம் நடந்தது.
தி.நகர் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மூத்த தலைவர் வேந்தாந்தம் தலைமையில், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், பட்டாபிஷேக ராமரின் சிலை வைத்து பூஜைகள், பஜனைகள் நடத்தப்பட்டன.
பின் வேதாந்தம் கூறுகையில், ''ஜன., 22ம் தேதி சரித்திர பொன் நாள். ராமஜென்ம பூமியில் இருந்த கோவில், பாபர் காலத்தில் இடிக்கப்பட்ட ஆதாரம் லண்டன் மியூசியத்தில் உள்ளது. நாம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே கோவில் கட்டிஉள்ளோம். மத உணர்வை புண்படுத்தவில்லை,'' என்றார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பெருமாள் கோவிலில், அயோத்தி ராமர் பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணி முதல் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கர்நாடக இசை கச்சேரியும் அன்னதானமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை டி.டி.டி., தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் செய்திருந்தார்.
பா.ஜ.,வின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், பிரசாரப் பிரிவு செயலர் செந்தில் குமார், மண்டல் தலைவர் சுரேஷ் தயாநிதி சார்பில் தி.நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நங்கநல்லுார்
நங்கநல்லுார் விஷ்ணு சகஸ்ரநாம பக்தஜன சபா, சேவா ஸ்ரீ சார்பில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, பவமான அன்னதான டிரஸ்ட் சார்பில் அனைவருக்கும் உணவளிக்கப்பட்டது.
மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில், நேற்று காலை 9:00 மணி முதல் அகண்ட ராம நாம ஜபம் செய்யப்பட்டது.
வேளச்சேரியில் உள்ள, ஸ்ரீ ஞான சித்தி விநாயகர் கோவில், சுந்தர விநாயகர் கோவில், தண்டீஸ்வரன் நகர் கோவில், ராமர் மடம், சிவன் விஷ்ணு கோவில், கணபதி சச்சிதானந்த ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில், எல்.இ.டி. திரையில், அயோத்தி பால ராமர் பிரதிஷ்டை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வலைதளத்தில் ஆடியோ
பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில், அய்யப்பன் கோவில்களில், பெரிய திரைகள் வாயிலாக ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டு, பஜனையும் நடந்தது.
அதேநேரம், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களில், திரையில் கும்பாபிஷேக நிகழ்ச்சி காண்பிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
பா.ஜ., பெண் நிர்வாகி ஒருவர் அனுமதி மறுப்பு குறித்து கோவில் செயல் அலுவலர் மாதவனிடம் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவை தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தன் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆவடி
ஆவடி, சேக்காடில் உள்ள கோதண்டராமர் கோவில், பருத்திப்பட்டில் உள்ள ஜெய் கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளி, ஆவடி, ஸ்ரீ கல்யாண விநாயகர் கோவில் மற்றும் திருநின்றவூர், பிரகாஷ் நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் பக்தர்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
கோயம்பேடு பூ சந்தையில், வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் மேடை அமைத்து, ராமர், சிலைக்கு பூஜை செய்யப்பட்டது.
மேலும், எல்.இ.டி., திரை அமைத்து கும்பாபிஷேக நிகழ்ச்சி, ஒளிபரப்பு செய்யப்பட்டது. 1,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல, விருகம்பாக்கம் சொர்ணாம்பிகை நகரில் ஸ்ரீராம பக்த ஜன சமாஜ், கோயம்பேடு சின்மையா நகர் சந்திப்பு, பிருந்தாவன் நகர் கருமாரியம்மன் கோவில், நெற்குன்றம் ரெட்டி தெரு, கண் திறந்த பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் டிவி வாயிலாக கும்பாபிஷேகம் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மாம்பலம் நெடுஞ்சாலையில் உள்ள சவுந்தர்யா விநாயகர் கோவிலில் அன்னதானம் வழங்கி, எல்.இ.டி., திரையில் கும்பாபிஷேகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பாடியநல்லுாரில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவில் மண்டபத்தில், பா.ஜ., மாநில ஓ.பி.சி., அணி சார்பில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சிறப்பு யாக பூஜை நேற்று காலை நடந்தது.
திருவேற்காடு ஆதிமாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. வேலப்பன் சாவடியில் உள்ள மண்டபத்தில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பட்டது.
வேளச்சேரி ஸ்ரீ லலிதா சமிதியின் நிறுவனர் மோகன் குருஜி தலைமையிலான குழுவினர், விசேஷ ராமநாம ஜப யக்ஞம் நடத்தி சிறப்பித்தனர். அவருக்கு 'அபிநவ வஸிஷ்ட்' விருது அளிக்கப்பட்டது.
கவுரிவாக்கம்
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், 383 இடங்களில் இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரலையில் கண்டு மகிழ்ந்தனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கவுரிவாக்கம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மாவட்ட பா.ஜ., தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்தனர்.
மண்ணடி, தனியார் இடத்தில், அகில இந்திய ஹிந்து வழக்கறிஞர்கள் ஒருமைபாட்டு சங்கம் சார்பில், எல்.இ.டி., திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- நமது நிருபர் குழு -

