/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் 10ம் வகுப்பு மாணவருக்கு எச்சரிக்கை
/
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் 10ம் வகுப்பு மாணவருக்கு எச்சரிக்கை
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் 10ம் வகுப்பு மாணவருக்கு எச்சரிக்கை
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் 10ம் வகுப்பு மாணவருக்கு எச்சரிக்கை
ADDED : அக் 07, 2025 12:33 AM
ஆவடி, பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்த, 10ம் வகுப்பு மாணவரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
காவல் கட்டுப்பாட்டு அறையை, நேற்று காலை தொடர்பு கொண்ட நபர் ஆவடியில் செயல்படும் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அந்த நபர் பேசிய மொபைல் போன் எண்ணை வைத்து, ஆவடி போலீசார் விசாரித்தனர்.
இதில், ஆவடி, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீ சாய் டிரேடர்ஸ்' என்ற மளிகைக் கடையில் இருந்து அழைப்பு வந்தது தெரிந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கடை உரிமையாளர் ஜெயகுமார், 64, என்பவரை, பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், நேற்று காலை கடைக்கு வந்த பள்ளி மாணவர் ஒருவர் 'தந்தையிடம் அவசரமாக பேச வேண்டும்' எனக் கூறி, ஜெயகுமாரின் மொபைல் போனை வாங்கி பேசியுள்ளார். பின், மொபைல் போனில் 'பிளைட் மோடு' மாற்றி கொடுத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆவடி போலீசார் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, ஆவடியைச் சேர்ந்த தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் என தெரிந்தது. போலீசார், அவரது பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
காலாண்டு தேர்வு முடிந்து, நேற்று பள்ளி திறக்கப்பட்டதால், 'தேர்வு தாள் தருவர் என்ற பயத்தில், மாணவன் அவ்வாறு செய்திருக்கலாம்' என போலீசார் தெரிவித்தனர்.
பத்திரிகை அலுவலகம்
நடிகர் வீட்டிற்கு மிரட்டல்
மெரினா காமராஜர் சாலையில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், அண்ணாசாலை சிம்சனில் உள்ள ஹிந்து பத்திரிகை அலுவலகத்திலும், மயிலாப்பூரில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிலும், வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.