/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகர் சத்யா மீதான வழக்குகள் அரசின் அனுமதிக்கு காத்திருப்பு
/
தி.நகர் சத்யா மீதான வழக்குகள் அரசின் அனுமதிக்கு காத்திருப்பு
தி.நகர் சத்யா மீதான வழக்குகள் அரசின் அனுமதிக்கு காத்திருப்பு
தி.நகர் சத்யா மீதான வழக்குகள் அரசின் அனுமதிக்கு காத்திருப்பு
ADDED : செப் 23, 2025 01:12 AM
சென்னை:'தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு உள்பட இரு வழக்குகளில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்தியநாராயணன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர, அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
சென்னை தி.நகர் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்தியநாராயணன். இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக, 2.64 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்து உள்ளதாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியில், 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், இரு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
'இந்த வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, கொளத்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, 'இரு வழக்குகளில் புலன் விசாரணை நடந்து வருகிறது. நான்கு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்று, வழக்கை முடித்து வைத்து, கடந்தாண்டு செப்டம்பரில், தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''இரு வழக்குகளிலும் புலன் விசாரணை முடிந்து விட்டன. வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ., சத்யநாராயணன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர, அரசின் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
''அதற்கு அனுமதி கிடைத்ததும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்,'' என்று தெரிவித்து, நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு தொடர விரைந்து அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.