/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைதான ஞானசேகரன் மீது குவியும் திருட்டு வழக்குகள்
/
கைதான ஞானசேகரன் மீது குவியும் திருட்டு வழக்குகள்
ADDED : மார் 21, 2025 12:23 AM
சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைதான, தி.மு.க., அனுதாபி ஞானசகேரன் மீது, திருட்டு வழக்குகள் குவிக்கின்றன.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், கடந்தாண்டு, டிச., 25ல், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த, தி.மு.க., அனுதாபி ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டார்.
தொடர் விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.
பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதியில் மட்டும், ஏழு சொகுசு பங்களாக்களில் கொள்ளை அடித்துள்ளார். இது தொடர்பாக, பள்ளிக்கரணை போலீசாரும் கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பின், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஞானசேகரன் அளித்த வாக்குமூலத்தின்படி, அவரிடம் திருட்டு நகைகள் வாங்கிய ஆலந்துாரைச் சேர்ந்த குணால் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 120 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2013ல், மாம்பலம் காவல் நிலைய எல்லையில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரித்தனர்.
அந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதே ஞானசேகரன் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, திருட்டு வழக்கில் ஞானசேகரனின் பெயரும் சேர்க்கப்பட்டது.
இந்த வழக்கிலும், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை, போலீசார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
***